சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்றுடன்(பிப்.25) ஆம் தேதி பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈபிகேஎஸ் இளங்கோவன், அதிமுக கூட்டணி சார்பாக கே.எஸ் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா மற்றும் தேமுதிக சார்பாக ஆனந்த் என நான்கு முனைப்போட்டி ஏற்பட்டாலும் திமுக, அதிமுக இடையே பிரதான போட்டி நிலவிவருகிறது.
தொடக்கத்தில் இருந்தே தேர்தல் களமானது சூடுபிடிக்க தொடங்கியது. திமுக சார்பாக பல அமைச்சர்களும், நிர்வாகிகளும், அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர்களும், நிர்வாகிகளும் களம் இறக்கப்பட்டனர். ஆரம்பத்தில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாட்கள் செல்ல செல்ல ஆளுங்கட்சி கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிக அளவில் என்று பேசப்பட்டது. அதிமுக சார்பாக மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு போன்ற மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.
திமுக, அதிமுக என இரண்டு தரப்பிலும் பல கூட்டணி கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்திருந்த நிலையில் இன்று மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்காளர்களுக்கு ஈபிஎஸ், அறிக்கையின் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்பிற்கினிய வாக்காளப் பெருமக்களே வணக்கம். வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கே.எஸ் தென்னரசுக்கு, "இரட்டை இலை" சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அதிமுக ஆட்சி ஏழை, எளியோரின் வேதனைகளைத் தீர்க்கின்ற ஆட்சி, தாய்மார்களின் இதயங்களில் இன்பங்களைச் சேர்க்கின்ற ஆட்சி, நடுத்தர மக்களுக்கு நன்மைகளைத் தருகின்ற ஆட்சி. விலையில்லா அரிசி, மிக்ஸி, கிரைண்டர், திருமண உதவித் தொகை, தாலிக்குத் தங்கம், மடிக் கணினி, கல்வி உபகரணங்கள், வண்ணச் சீருடை, கறவை மாடு, ஆடுகள், திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம், ஏழை, எளிய மக்கள் பசியாற அம்மா உணவகங்கள் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
மேலும், அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை, எளிய, மாணவ, மாணவியர்கள் மருத்துவக்கல்வி பயில 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு; ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்திடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அம்மா மினி கிளினிக்குகள், புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், விவசாயப் பெருங்குடி மக்களின் 60 ஆண்டுகால கனவை நனவாக்கும் வகையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் குளங்கள், குட்டைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது போன்றவற்றை செயல்படுத்தியுள்ளோம்.
நிறைவேற்ற முடியாத பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி திமுக ஆட்சியில் அமர்ந்தது. வன்முறையும், அராஜகமும் திமுகவுடன் ஒட்டிப் பிறந்த பிறவி குணங்கள் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் அந்தக் கட்சியினரின் அடாவடிகளும், குற்றச் செயல்களும், சட்டத்தை மீறும் போக்கும் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
விடியா அரசு பதவியேற்ற நாள் முதல் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல், போதைப் பொருட்கள் நடமாட்டம், குண்டு வெடிப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சட்டம்-ஒழுங்கு படுமோசமாக சீர்கெட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
விடியா திமுக ஆட்சியில், ஒரு குடும்பம் அசுர வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு வகைகளில் அதிகார துஷ்பிரயோகங்கள், முறைகேடுகள், அமைச்சர்களின் பல்வேறு அடாத செயல்கள் மற்றும் மிரட்டல்கள், தமிழ்நாடுமெங்கும் அதிகாரப் பதவிகளில் அமர்ந்துள்ள திமுகவினரின் மக்கள் விரோதச் செயல்கள். ரவுடிகளின் அராஜகங்கள், வியாபாரிகள் தங்களது வணிகங்களை செய்வதில் அச்சம், மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியாத அளவிற்கு மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உட்பட பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலைவாசி உயர்வுகளால் செய்வதறியாது பரிதவித்து, மிகுந்த வேதனையோடும், அச்சத்தோடும் வாழ்ந்து வருகின்றனர்.
சுமார் ஏழரை லட்சம் முதியோர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த, முதியோர் உதவித் தொகை தற்போது நிறுத்தப்பட்டிருப்பது மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. ஆளும் மக்கள் விரோத திமுகவிற்கு எதிர்ப்பைக் காட்ட, இந்த இடைத்தேர்தல் உங்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு என்றார்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொடுங்கோல் ஆட்சியை நடத்துபவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கும் பெரும் பொறுப்பு, வாக்காளப் பெருமக்களாகிய நினைவுபடுத்த விரும்புகிறேன். விடியா திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் மற்றும் மக்கள் விரோதச் செயல்களை தோலுரித்துக் காட்டியும், திமுகவினர் தில்லுமுல்லுகளை செய்வதில் வல்லவர்கள் என்பதையும், தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் திமுகவினர் செய்து வந்த விஞ்ஞான ரீதியிலான தில்லுமுல்லுகளையும், வாக்காளப் பெருமக்களாகிய உங்களிடம் நான் விவரமாக விளக்கிக் கூறி இருந்தேன்.
தொடர்ந்து என்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில், அதிமுக ஆட்சியில் மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட பல்வேறு மகத்தான திட்டங்களைப் பட்டியலிட்டு உங்களிடையே பேசியபோது, தொகுதி மக்களாகிய நீங்கள் அனைவரும் எனது பேச்சை உன்னிப்பாகக் கேட்டறிந்து, "எங்கள் வாக்கு இரட்டை இலைக்கே" என்று நீங்கள் விண்ணதிர முழங்கிய காட்சி இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதற்காக, வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனதருமை வாக்காளப் பெருமக்களே, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அதிமுகவின் நற்பணிகள் தொடரவும், வாக்குப் பதிவு நாளான (பிப்.27)ஆம் தேதி வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் அனைவரும் காலையிலேயே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, “இரட்டை இலை” சின்னத்தில் உங்களது பொன்னான வாக்குகளை அளித்து, வேட்பாளர் தென்னரசுவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து, விடியா திமுக அரசின் மக்கள் விரோதச் செயல்களுக்கு முடிவுகட்டுமாறு உங்களையெல்லாம் அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:காங்கிரஸ் காரிய கமிட்டியில் முன்னாள் தலைவர்கள் - விதிகளை மாற்றி சூசகம்!