சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில், கடந்த டிச.4-ஆம் தேதி மிக கனமழை பெய்தது. இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் சூழ்ந்து காணப்பட்டது. இதனையடுத்து, மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து இருந்த வெள்ள நீர் அகற்றப்பட்டது. அதேநேரம், எண்ணூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ள நீருடன் எண்ணெய் கழிவும் கலந்தது.
இதனால், அப்பகுதி முழுவதுமே எண்ணெய் படலமாக மாறியது. பின்னர், இது தொடர்பான செய்திகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவ, இதனை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. இதன்படி, விரைவாக எண்ணெய் கழிவுகளை வெளியேற்றி, பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என சிபிசிஎல் நிறுவனத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று (டிச.16) சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹூ தலைமையில், எண்ணெய் கழிவு மேலாண்மைக் குழுவின், உயர்மட்ட ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், எண்ணெய் கழிவுகள் அகற்றப்படுவதன் தற்போதைய நிலை மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை (டிச.18) முதல் நாளை மறுநாளுக்குள் (டிச.19) எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த நடவடிக்கையில் வென்ஸ் ஹைட்ரா லிஃப்ட்ஸ் பிரைவட் லிமெடெட்-இன் சீ கேர் சர்வீசஸ் மற்றும் நியோவின் இந்தியா லிமிடெட்-இன் விராஜ் சீ கிளீனிங் சர்வீசஸ் ஆகிய முகமைகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தற்போது வரை 5 உறிஞ்சும் திறன் கொண்ட லாரிகள், 11 ஜேசிபிக்கள், 13 டிப்பர் லாரிகள், 5 பொக்லைன், 4 ஸ்கிம்மர், 2 டிராக்டர் மற்றும் 4 பிக்கப் லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அது மட்டுமல்லாமல், கூடுதலாக 4 ஜெட் வாஷர்ஸ், 2 ஃபிளஷ்ஷிங் பம்புகள் மற்றும் 2 ஹைட்ரோ ஜெட் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் முகத்துவார குப்பம், எண்ணூர் குப்பம், நெட்டுக்குப்பம் மற்றும் காட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளில் எண்ணெய் கழிவுகள் எடுக்கப்பட்ட அளவீடுகள், மண் மற்றும் கரை சுகாதார மேலாண்மைப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: சென்னை சி.பி.சி.எல் (CPCL) நிறுவனத்தில் திடீர் தீ விபத்து..மீட்புப் பணிகள் தீவிரம்..!