சென்னை : தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை சுமார் 7.30 மணி முதல் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் பொன்முடியின் மூத்தமகன் கவுதம சிகாமணி எம்.பி வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டை மற்றும் விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி இல்லத்துக்கு வந்த தடய அறிவியல் நிபுணர்கள், ஆவணங்கள் ஏதும் அழிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், இந்தச் சோதனையின்போது, அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான இடங்களில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் ரூ.70 லட்சம் மதிப்பிலான இந்திய ரூபாய் உள்பட மொத்தம் ரூ.80 லட்சத்தை அமலாக்கத் துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்தப் பணம் குறித்து அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத் துறை எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து, கணக்கில் காட்டப்படாத பணம் என்பதால், அந்தத் தொகையை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வரும் சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் இல்லத்துக்கு காலை முதலே பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்த அவரது காரை அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளனர். மேலும் அந்த காரானது அமைச்சர் பொன்முடியின் இரண்டாவது மகனான அசோக் சிகாமணியின் கே.எம். மருத்துவமனைக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
![enforcement-directorate-raids-minister-ponmudis-youngest-sons-hospital](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17-07-2023/19022593__pon.png)
இதனையடுத்து சென்னை - கே.கே. நகர் ஆர்.கே. சண்முகம் சாலையில் அமைந்துள்ள கே.எம். நர்சிம் ஹோம் மற்றும் கே.எம் ப்ளூம் சிறப்பு மருத்துவமனையில் மூன்று அமலாக்கத்துறையினர் இன்று மாலை 4 மணியளவில் சென்றுள்ளனர். பின்னர் மருத்துவமனையின் கணக்காளர் அறையை சோதனை நடத்தி கணக்காளரான பிரபு என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : Senthil balaji: செந்தில்பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்.. மீண்டும் விசாரிக்க தயாராகும் அமலாக்கத்துறை