சென்னை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே எரிசனம்பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளி வகுப்பறைகளுக்கான மூன்று கட்டடங்கள், மதிய உணவு தயாரிக்கும் கூடம், அங்கன்வாடி கட்டடம் ஆகியவை 0.75 ஏக்கர் பரப்பளவிலும், விளையாட்டு மைதானம் 0.15 ஏக்கர் பரப்பளவிலும் அமைந்துள்ளது.
பள்ளியின் மைதானத்தில் எவ்வித அனுமதியும் பெறாமல் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி அமைக்க திட்ட பொறியாளர் சட்டவிரோதமாகவும் நடவடிக்கை எடுத்துவருவதாக கூறப்படுகிறது. இது குறித்து கருப்புசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், “மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமையவுள்ள நீர்தேக்க தொட்டிக்கு அனுமதி மறுக்க வேண்டும். தலைமை ஆசிரியருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளியின் நிலத்தில் மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக பெரிய தண்ணீர் தொட்டி அமைப்பதற்குப் பதிலாக கூடுதல் நிதி மற்றும் நிலங்களை ஒதுக்கி பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும்.
விளையாட்டு மைதானத்தின் அளவைக் குறைக்கும் வகையில் அமையவுள்ள நீர்தேக்கத் தொட்டியை கட்ட அனுமதிக்ககூடாது” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகவும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் பாராட்டு - மா. சுப்பிரமணியன்