சென்னை: அனகாபுத்தூர் ஆற்றங்கரை ஓரத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக அப்பகுதியில், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளை செலுத்தி வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால், தண்ணீர் செல்ல வழியில்லாமல் சென்னை மாநகரமே தத்தளித்தது. ஆகையால் அதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் எதுவாக இருந்தாலும் அதனை எவ்வித சமரசமுமின்றி அப்புறப்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றமும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் சென்னையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், இதற்கு முன்னர் இருமுறை அகற்றும் பணியில் வருவாய்துறை அதிகாரிகள் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
அதற்கு பின் பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்தன. இந்த நிலையில் நேற்று மீண்டும், அடையார் ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் முன்னிலையில் அகற்றும் பணி துவங்கியது. அதாவது அனகாபுத்தூரில் அடையார் ஆற்றங்கரை ஓரத்தில் அரசுக்கு சொந்தமான ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள சுமார் 700 வீடுகளை செங்கல்பட்டு மாவட்ட மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அகற்ற உத்தரவிட்டார்.
அதன்படி, பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளது. மேலும் அப்பகுதியில் இணை ஆணையாளர் மூர்த்தி, துணை ஆணையாளர் பவன் குமார் ரெட்டி ஆகியோர் தலைமையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகையால் எதிர்ப்பு தெரிவித்த ஆண்கள், பெண்கள் என பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் போலீசார் கைது செய்து இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும் போது, வீட்டின் உரிமையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது, அப்போது பெண்மணி ஒருவர் மயங்கி விழுந்து, அவரை மீட்ட போலீசார் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வீடுகளை காலி செய்து வீட்டில் இருந்த பொருட்களை வருவாய் துறை அதிகாரிகள் அப்புறபடுத்தினர். அதனைத் தொடர்ந்து வீடுகளை இடிக்கும் பணியானது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.