சென்னை: சென்னை ஆவடி ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே அண்ணனூர் ரயில்வே பணிமனையில் இரவு பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில், ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி ரயில் செல்வதற்காக 3வது நடைமேடைக்கு மின்சார ரயில் வந்துள்ளது. அப்போது மின்சார ரயில், ஆவடி ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், எதிர்பாராத விதமாக மின்சார ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டது.
இந்த விபத்தின் காரணமாக, ஆவடி - சென்னை மார்க்கத்தில் இருந்து புறப்படும் ரயிகள் உள்பட வந்தே பாரத் ரயில் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சென்னை செல்ல வேண்டிய அனைத்து புறநகர் ரயில்களும் தாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால், ரயில் நிலையத்தில் ஆட்கள் குறைவாக காணப்பட்டனர். விபத்துக்குள்ளான ரயில் பெட்டியில் ஆட்கள் இல்லாததால் உயிர் சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டது.
தற்போது பெட்டிகளை அகற்றும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த விபத்துக்கு காரணம் ஓட்டுநரின் கவனக்குறைவா, அல்லது சிக்னல் குறைபாடா என்று பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரை தண்டவாளப் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.24) காலை திருவள்ளூரில் இருந்து திருத்தணிக்கு இயக்கப்பட்ட மின்சார ரயில் அண்ணனூரில் இருந்து ஆவடிக்கு மின்சார ரயில் வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, “ஆவடி மின்சார ரயில் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை 5.40 மணிக்கு மின்சார ரயில் சென்றது. அப்போது ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் தடம் புரண்டது.
இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத், சதாப்தி ரயில்கள், கோவை செல்லும் விரைவு ரயில், 5 மின்சார ரயில்கள் தாமதமாகச் சென்றன. இந்த ரயில்கள் அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே போக்குவரத்து சரிசெய்து பின்பு இயக்கப்பட்டது. இதுபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சப்தகிரி, பிருந்தாவனம், டபுள் டக்கர் விரைவு ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும், இது குறித்து தகவல் அறிந்த சென்னை ரயில்வே கோட்ட பொது மேலாளர் தலைமையிலான அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தற்போது விரைவு ரயில்கள் செல்லும் பாதை சீரமைக்கப்பட்டு, இந்த வழித்தடத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், மின்சார ரயில்கள் விரைவு ரயில் பாதையில் இயக்கப்படுகின்றன. விரைவில் மின்சார ரயில் பாதை சீரமைக்கப்பட்டு, ரயில்கள் இயக்கப்படும்” என்றனர்.
இதையும் படிங்க: செங்கம் அருகே கார் - அரசுப் பேருந்து மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!