உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. இதன் அடிப்படையில் முதற்கட்டமாக மாநிலத் தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
மூன்று ஆண்டாக ஒரே மாவட்டத்தில் பணியாற்றிவந்த காவல் ஆய்வாளர்கள், அரசு அலுவலர்கள் என அனைவரும் பணியிடமாறுதல் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் பணிகளை மேற்கொள்ள, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வாக்காளர் பட்டியல் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் 92 ஆயிரத்து 771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அக்டோபர் நான்காம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்காக வரவழைக்கப்பட்டுள்ள 1.45 லட்சம் வாக்கு இயந்திரங்களை முதற்கட்டமாக ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை சேர்த்தல், திருத்தம், நீக்கம் செய்வதற்கு நவம்பர் 18ஆம் தேதிவரை கால அவகாசம் நீ்ட்டித்துள்ளது.
வாக்காளர்களின் பெயர்களைப் புதிதாக சேர்த்தல், நீக்குதல், திருத்துதல் உள்ளிட்டவைகளுக்கு www.nvsp.in என்ற இணையதளத்தில் மேற்கொள்ளலாம். உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள www.tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.