சென்னை: ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை வந்தாலே 3 அல்லது 4 தமிழ் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் 8 தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளது. மேலும் வெளியாகும் அனைத்துப் படங்களும் சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1. தண்டட்டி: பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் தண்டட்டி. இந்த படத்தில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, உள்பட பலர் நடித்துள்ளனர். மகேஷ் முத்துசாமி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
2. அஸ்வின்ஸ்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள வசந்த் ரவி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘அஸ்வின்ஸ்’. இந்த படத்தில் விமலா ராமன், சிம்ரன் பரீக், முரளிதரன், சரஸ்வதி மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தருண் தேஜா இயக்கத்தில் விஜய் சித்தார்த் இசையில் இந்த படம் உருவாகி உள்ளது. சைக்காலஜிகள் ஹாரர் படமாக இது உருவாகி உள்ளது.
3. ரெஜினா: நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடித்த ‘ரெஜினா’ படத்தில் நிவா ஆதிதன், ரிது மந்த்ரா, ஆனந்த் நாக், தீனா, விவேக் பிரசன்னா உள்பட பலர் நடித்துள்ளனர். ‘ரெஜினா’ படத்தை சதீஷ் நாயர் இயக்கியுள்ளார். பவி கே பவன் ஒளிப்பதிவில், டாபி ஜான் படத்தொகுப்பில், சதீஷ் நாயர் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.
4. பாயும் ஒளி நீ எனக்கு: விக்ரம் பிரபு, வாணி போஜன், தனஞ்செயா, விவேக் பிரசன்னா உள்பட பலர் நடிப்பில் உருவாகி இந்த படத்தை கார்த்திக் அத்வைத் என்பவர் இயக்கியுள்ளார். சாகர் இசையில், ஸ்ரீதர் ஒளிப்பதிவில் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கார்த்திக் மூவி ஹவுஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
5. அழகிய கண்ணே: லியோ சிவகுமார் மற்றும் சஞ்சிதா ஷெட்டி முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘அழகிய கண்ணே’. இந்த படத்தில் சுஜாதா, பிரபு சாலமன் மற்றும் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளனர். விஜயகுமார் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு என்.ஆர். ரகுநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
6. தலைநகரம் 2: சுந்தர் சி நடித்த ‘தலைநகரம் 2’ என்ற படத்தை அஜித்தின் ‘முகவரி’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சுந்தர் சி, பாலக் லால்வாணி, யோகி பாபு, ரவி மரியா, தம்பி ராமையா உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் சுதர்சன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.
7. வேட்டையாடு விளையாடு: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது டிஜிட்டலில் இந்த படம் இந்த வாரம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன், ஜோதிகா, பிரகாஷ் ராஜ், கமாலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
8. நாயாடி: கேரளாவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனமான நாயாடிகளின் கதையை சொல்லும் திகில் படம். இப்படத்தில் ஆதர்ஷ் மதிகாந்தம் தானே இயக்கி, தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார். மேலும், அஜித்துடன் 'துணிவு' திரைப்படத்தில் நடித்த காதம்பரி நாயகியாக நடித்துள்ளார். பிரபல யூடியூபரான ஃபேபி முக்கிய வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிகர் விஜய் பிறந்தநாள்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு.. விஜய் ரசிகர்களின் வேற லெவல் கொண்டாட்டம்!