சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில், "தமிழ்நாட்டில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் உள்ளது.
![minis](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-anbil-magesh-script-vedio-7204807_27082021101202_2708f_1630039322_877.jpg)
தனியார் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும் சிரமப்படுகின்றனர். எனவே பள்ளிகளை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி
80 விழுக்காடு அரசு பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். மற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போட வேண்டும் என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதனடிப்படையில் 1ஆம் தேதிக்குள் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளி மாணவர்களுக்கு புத்தகத்தை வழங்கியதில் 13 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சரிடம் தெரிவித்ததற்கு, அதனை ஒன்றும் செய்ய வேண்டாம். புத்தகப் பைகளை ஒன்றும் செய்யாமல் மாணவர்களுக்கு அப்படியே வழங்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.
32 கோடி ரூபாய் வீண் செலவு
சமச்சீர் கல்வி வந்தபோது அப்போதைய முதலமைச்சர், கருணாநிதியின் படத்தைக் கிழித்து அதற்காக 32 கோடி ரூபாய் வீண் செலவு செய்துள்ளார். மக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் தேடாமல் அதனை அப்படியே வழங்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
பள்ளிகளை திறப்பதற்கான வழி காட்டு நெறிமுறைகள் சுகாதாரத் துறையிலிருந்து அளித்துள்ளனர். கடந்தாண்டு வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அப்படியே வழங்கியுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த் துறை இணைந்து இன்று அந்த வழிகாட்டு நெறிமுறைகளை ஆய்வுசெய்து விரைவில் வெளியிடுவோம்.
மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர்கள் தனித்தனியாக உத்தரவு வழங்குவதைத் தவிர்த்து ஒரே மாதிரி உத்தரவு வழங்க வேண்டும் என்பது குறித்தும் அறிவுரை வழங்கியுள்ளோம்" என தெரிவித்தார்
இதையும் படிங்க: 'உள்ளாட்சித் தேர்தலில் திமுக தரும் வாக்குறுதியை நம்பிடாதீங்க!'