சென்னை: சட்டப்பேரவையில், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செல்லூர் ராஜூ, கூட்டுறவு சங்கங்களின் முறைகேடுகளைச் சீர்கேடு செய்து அதனைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, 'சாதாரண மக்களை கூட்டுறவு சங்கத் தலைவராக உருவாக்கியவர், கலைஞர் தான். 2006ஆம் ஆண்டு கலைஞர் வேறுபாடின்றி கடன்தள்ளுபடி செய்தார்.
அதிமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக பொது விநியோகத் திட்டத்திற்கான மானியம் வழங்கப்படவில்லை. சுமார் 600 கோடி ரூபாய் அளவிலான மானியத்தை வங்கிகளுக்கு அதிமுக அரசு செலுத்தவில்லை. அந்த நிதியை தற்போதைய முதலமைச்சரே வங்கிகளுக்கு வழங்கியுள்ளார்” எனப் பதிலளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், 'உறுப்பினர் வேறு கேள்விக்கு சென்றால் விவாதம் தொடராது. இல்லையேல் இதற்கான விளக்கத்தை நான் கூறுவேன்' என்றார். தொடர்ந்து பேசிய சபாநாயகர், 'இருவருமே ஒரே மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் தான், இடம் பார்த்து பேசிக்கொள்ளுங்கள்' எனக் குறிப்பிட்டார்.
அப்போது எழுந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “இது ஜனநாயக நாடு, விவாதிக்கவே சட்டப்பேரவை கூறியுள்ளது. இதில் கண்டிஷன் எதுவும் போடமுடியாது” எனக் கூறிய அவர், “இது அரசா அல்லது தன்னாட்சியா” எனக் கேள்வி எழுப்பினார். இதனால், சட்டப்பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: வன்னியர் இட ஒதுக்கீடு: புள்ளி விவரங்களை சேகரிக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை