DYFI:சென்னை: சாதியையும், வன்மத்தையும், இழிவு உருவாக்கத்தையும் சுமந்து நிற்கின்ற புதுக்கோட்டை வேங்கைவயலில் மலம் கொட்டப்பட்ட நீர்தேக்கத் தொட்டியை இடிக்கும் போராட்டத்தை வரும் ஜனவரி 21ஆம் தேதி இந்திய ஜனநாயக வாலிபர் (DYFI) சங்கம் நடத்த உள்ளது.
இது தொடர்பாக சென்னையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (Democratic Youth Federation of India - DYFI) அமைப்பின் மாநில தலைவர் எஸ்.கார்த்திக் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், 'நாடு விடுதலைப் பெற்று, 75 ஆண்டுகளை கடந்தப் பின்னரும் கூட, இன்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாதியை முன்வைத்து தீண்டாமைக் கொடுமைகளும், வன்முறைகளும், இழிவுகளும் நிகழ்த்தப்படுவது சமூகத்தின் பொது மனசாட்சிக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்.
பாதிக்கப்பட்டோரை குற்றாவாளிகளாக சித்தரிப்பா?: மேலும், தற்போது அந்த குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. மாறாக வேங்கைவயல் பட்டியல் இன மக்களையே குற்றவாளிகளாக சித்தரிக்க காவல்துறை முயற்சிகளை எடுத்து வருகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதற்கான துரித முயற்சிகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என வலியுத்தினார்.
விசாரணை பட்டியலில் 36 பேர் பட்டியல் இனம்: தமிழ்நாட்டின் காவல் துறை விசாரணையைத் தொடங்கி, 20 நாட்களுக்கு மேலான பிறகும் கூட இன்றுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. அரசு கூறியுள்ள விவரங்களின் அடிப்படையில் இதுவரை விசாரிக்கப்பட்டுள்ள 85 நபர்களில் 36 பேர் பட்டியல் இன மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது விசாரணையை மேற்கொள்ளும் காவல் துறையினருக்கும், அரசு நிர்வாகத்திற்குமே சாதிய மனநிலையை இருப்பதை தெளிவாக காட்டுகிறது.
ரூ.2 லட்சத்தில் புதிய குழாய்கள்: இந்நிலையில் தமிழ்நாடு அரசு "உள்ளாட்சி அமைப்பின் உதவியோடு, அந்த கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சிறு மின்விசைத் தொட்டி ஆகியவை சுத்தம் செய்யப்பட்டதோடு, அனைத்து குடிநீர் வழங்கு குழாய்களும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, அதன் மூலமாக நீரேற்றப்பட்டு, நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு, அறந்தாங்கி பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், தற்போது குடிநீர் சுத்தமாக உள்ளது என அறிக்கை வரப்பெற்றுள்ளது.
அந்த கிராமத்திலுள்ள 32 வீடுகளுக்கும் ரூ.2 லட்சம் செலவில் முற்றிலும் புதிய இணைப்புக்குழாய்கள் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு, 5.1.2023 முதல் சீரான குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது" எனக் கூறியுள்ளது.
அதேபோல, வேங்கைவயல் கிராமத்தில் மலம் கொட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி தீண்டாமையின், சாதிய இழிவு உருவாக்கத்தையும் , சமூக ஒற்றுமையின்மையின் அடையாளமாக மாறியுள்ளது. புதிய நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும் அந்த இழிவின் அடையாளமாக மாறியுள்ள தொட்டி இன்னும் இருப்பது மனித மாண்புகளை கொச்சைப்படுத்தும்.
பட்டியல் இனத்தவர்களேயே குற்றவாளிகளாக்க முயற்சி: வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கூறுகள் அனைத்தும் இருக்கும் போதிலும் விசாரணை என்ற பெயரில் பட்டியல் இன மக்களையே குற்றவாளிகளாக்கும் முயற்சிகள் நடைபெறுவது மிக கண்டனத்திற்கு உரியது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு தானாக முன்வந்து மலம் கொட்டப்பட்ட நீர்தேக்கத் தொட்டியை இடித்திருக்க வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குடிநீரில் மலம் கலந்தது; 21ம் நூற்றாண்டில் அநாகரிகத்தின் உச்சம் - திருமாவளவன்