சென்னை: தங்கமணி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் தங்கமணி, அவரது மகன் தரணிதரன், அவரது மனைவி சாந்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று (டிசம்பர் 15) தங்கமணி, அவரது உறவினர்களுக்குச் சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் 33 இடங்கள், சென்னையில் 14 இடங்கள், ஈரோட்டில் எட்டு இடங்கள், சேலத்தில் நான்கு இடங்கள், கோயம்புத்தூர், கரூரில் தலா இரு இடங்கள், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பூர், ஆந்திரா மாநிலத்தில் தலா ஒரு இடம், பெங்களூருவில் இரண்டு இடங்கள் என மொத்தம் 69 இடங்களில் சோதனை நடைபெற்றது.
விரைவில் விசாரணை?
இந்தச் சோதனையில் கணக்கில் வராத இரண்டு கோடியே 16 லட்சத்து 37 ஆயிரத்து 300 கோடி ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செல்போன்கள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், ஹார்டு டிஸ்குகள், வழக்கிற்குத் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல்செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தங்கமணி, அவர்களது உறவினர்களிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெடிகுண்டு வழக்கு: விடுதலைப் புலிகள் உள்பட எழுவர் விடுதலை