சென்னை: சட்டப்பேரவை இன்று (மே.5) கூடியதும் முதலில் வினாக்கள் விடைகள் நேரம் (கேள்வி பதில் நேரம்) நடைபெற்றது. அப்போது, உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
இதனிடையே, கே.வி.குப்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெகன் மூர்த்தி கேள்வி நேரத்தில் பேசிய போது, "கே.வி.குப்பம் பகுதிக்கு பெண்கள் கலை கல்லூரி வேண்டும். இப்போது அங்கு இருபாலர் படிக்கும் கல்லூரிகளாக இருக்கிறது.
போக்குவரத்து வசதிகள் இருக்கின்ற பல கிராமங்களில் இருந்து வரும் மாணவிகளை இருபாலர் கல்லூரிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் இருக்கின்றனர். எனவே, படிக்க விரும்பும் பெண்களின் வாழ்க்கைப் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதனால் பெண்கள் கலை கல்லூரி வேண்டும்" எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "கே.வி.குப்பம் இருக்கும் வேலூர் மாவட்டத்தில் அரசு கல்லூரிகள் இயங்கி வருகிறது. வேலூர் சேர்காடு பகுதியில் நீர்வளத்துறை அமைச்சர் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு ஒரு கல்லூரிக்கு முதலமைச்சர் அனுமதி கொடுத்துள்ளார். அதனால் இப்போது கல்லூரி தொடங்கும் நோக்கம் இல்லை'' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ''குடியாத்தம், காட்பாடி போன்ற இடங்களில் கல்லூரி உள்ளது. கல்லூரிகள் இல்லாத தொகுதிக்கு முன்னுரிமை வழங்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார். நான் குடியாத்தத்தில் பணியாற்றி உள்ளேன். அங்கு Co-Education கல்லூரி நல்ல முறையில் உள்ளது. பெண்கள் Co-Education போன்றவற்றையும் பார்ப்பதில்லை. பெண்கள் எந்த கல்லூரி என்றாலும் படிக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டார்.
இதற்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஜெகன் மூர்த்தி, "அமைச்சர் பதிலைத் தொகுதி மக்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. அவர்களுக்குப் பெண்கள் கலை கல்லூரி வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது. இது சம்பந்தமாக என்னைச் சந்தித்து மனுவும் கொடுத்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, "அந்த தொகுதியில் அரசு கல்லூரி உள்ளது. காலியிடங்கள் உள்ளன. அதை முதலில் நிரப்ப வேண்டும். உங்களைச் சந்திக்க வருபவர்களை அந்தக் கல்லூரியில் படிக்கச்சொல்லுங்கள். வரும் காலங்களில் நிதி நிலைக்கு ஏற்ப தொகுதி மக்களுக்குத் தேவை இருக்கும் என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். எல்லோரும் கல்லூரி வேண்டும் எனக் கேட்கின்றார்கள்" எனத் தெரிவித்தார்.
மேலும், ''நீங்கள் வைக்கும் கோரிக்கை தவறு இல்லை. தற்போது அரசு கல்லூரி இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நீங்கள் கேட்கும் பெண்கள் அரசு கலைக்கல்லூரி நிதி நிலைக்கு ஏற்ப வரும் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்" எனக்கூறினார். இதற்கு குறுக்கீடு செய்த அவை முன்னவர் துரைமுருகன், ' 'இல்லை' என்பதை இவ்வளவு அழகாகச் சொன்ன ஒரே மந்திரி இவர் (பொன்முடி) ஒருவர் தான்' எனத் தெரிவித்தார்.
இதற்கு அமைச்சர் பொன்முடி, 'இந்தப்பதிலை சொல்ல சொன்னவர் இவர்தான் (துரைமுருகன்). ஏற்கெனவே குடியாத்தம், காட்பாடியில் கல்லூரி இருக்கு எனச்சொன்னார். என்னைப் பாராட்டி உள்ளார். அதற்கு நன்றி' எனத் தெரிவித்தார். மேலும், துரைமுருகன் பொன்முடி பேச்சால் அவையில் சிரிப்பு அலை ஏற்பட்டது.
இதனிடையே, இன்று 2022-23ஆம் ஆண்டிற்கான போக்குவரத்துத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் கலை, பண்பாடுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இதனிடையே, விவாதத்திற்கு முன்னதாக துறை அமைச்சர்கள் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.