சென்னை: கோடை வெயில் தொடங்கி உள்ள நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கன மழை, மிக கன மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியான தாம்பரம், ஆலந்தூர், கிண்டி, பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
மேலும் வேளச்சேரி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை பெய்த மழையின் காரணமாகக் கிண்டி, கத்திப்பாரா பகுதியில் நகர்ப்புற சதுக்கத்தின் பேருந்து நிலையம் முழுவதும் மழை நீரால் சூழ்ந்துள்ளது. அதேபோல் கத்திப்பாரா பகுதியிலிருந்து வடபழனி செல்லும் சுரங்கப்பாதையில் முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால் அவ்வழியாகச் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் நகர்ப்புற சதுக்கம் பேருந்து நிலைய பகுதியில் தேங்கியுள்ள மழைநீரையும், சுரங்கப்பாதையில் தேங்கி உள்ள மழை நீரையும் அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் குளு குளு சீசனை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென் தமிழகம் முதல் மத்தியப்பிரதேசம் வரை வடக்கு தெற்காகக் கிழக்கு திசை காற்றும்; மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி வளிமண்டலத்தில் நிலவுகிறது. இதன் காரணமாக மார்ச் 20 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மிதமான கோடை மழை பெய்யும். சென்னை புறநகர்ப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழில் பெயர் வைத்ததால் மட்டும் கேளிக்கை வரி விலக்கு கோர முடியாது - உயர் நீதிமன்றம்!