சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எத்தியோப்பியாவிலிருந்து சென்னை வந்த விமானத்தின் பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர். அதில் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த கொய்டேம் அரிகே வோல்டி மைக்கேல் (35) என்பவரைச் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாகக் கூறினார். அதிகாரிகள் அவரிடம் மேலும் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.
இதையடுத்து அவரது உடைமைகளைச் சோதனை செய்தனர். அப்போது அவர் விலை உயர்ந்த போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடமிருந்த 2 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4.7 கிலோ மேத்தோ குயிலோன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் போதைப்பொருளைக் கடத்தி வந்த எத்தியோப்பியா இளைஞரை போலீசார் கைது செய்தனர். இந்த கடத்தலின் பின்னணி என்ன? இதில் சர்வதேச கடத்தல் கும்பல்களுக்குத் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.