சென்னை: திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விமலேஷ்(25). பொறியியல் பட்டதாரியான இவர் அவரது நண்பர் திருநேசன் என்பவருடன் செர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்னை ரெட்டேரி மேம்பாலம் 200 அடி சாலை அருகே சென்று கொண்டிருந்தார்.
அங்கு மெட்ரோ பணிகள் நடைபெற்றுவருவதால் சாலை குறுகிய நிலையில் இருந்து உள்ளது. மேலும் நேற்று முன்தினம் பெய்த மழையால் சாலையோரம் தண்ணீர் தேங்கி சாக்கடை போல் இருந்து உள்ளது. இந்த நிலையில் அவ்வழியாக சென்ற விமலேஷ் முன்னால் சென்ற கிரேன் வாகனத்தை முந்தி செல்லும் பொழுது சாலையோரம் இருந்த சேற்றில் வழுக்கி கீழே விழுந்து உள்ளார்.
அப்போது பின்னால் வந்த கிரேன் வாகனம் இரு சக்கர வாகனத்தின் மீது ஏறி இறங்கியது. இதில், பைக்கில் சென்ற இருவரும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். கொண்டு செல்லும் வழியில் விமலேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், சிறு காயங்களுடன் திருநேசன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்து சென்ற வில்லிவாக்கம் போக்குவரத்து போலீசார் உயிரிழந்த விமலேஷின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கு உள்ளான வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் கிரேன் ஓட்டுநரான வட மாநிலத்தைச் சேர்ந்த நித்தின் குமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் உயிரிழந்த விமலேஷின் உறவினர்கள் கிரேனின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் எனவும், கிரேன் வாகனத்தில் இருந்த காப்பீடு போலியானது எனவும் கூறி வில்லிவாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தின் முன் மறியலில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் போலீசார் விசாரணையில், சம்பந்தப்பட்ட கிரேன் வாகனத்தின் காப்பீடு கடந்த டிசம்பர் மாதமே காலாவதி ஆகிவிட்டது தெரிய வந்துள்ளது. காப்பீடு இன்னும் காலாவதி ஆகாதது போல் போலியாக ஆவணம் தயாரித்து வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட ஒழுங்கு காவல்துறையிடமும் போக்குவரத்து போலீசார் ஒரு புகாரை அளித்து உள்ளனர். அதன் பின்னர், மறியலில் ஈடுபட்ட விமலேஷின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னர் அவர்கள் கலைந்துச் சென்றனர்.
இதையும் படிங்க: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி.. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு!