சென்னை: மேற்கு சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆடிட்டர் தனுமல்லையா பெருமாள் (69). இவரது வீட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக கார் ஓட்டுநராக பணியாற்றி வருபவர், உசேன். கடந்த 21ஆம் தேதி உசேன் தனது குழந்தைக்கு பிறந்தநாள் அழைப்பிதழ் கொடுப்பதற்காக தனுமல்லையா வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர் உசேன் இனிப்பு பாக்ஸை எடுத்து வந்து தனுமல்லையா குடும்பத்தினரிடம் கொடுக்க வந்தபோது திடீரென வீட்டிற்குள் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள், உசேனின் கழுத்தில் கத்தியை வைத்து தனுமல்லையா குடும்பத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.
அப்போது உசேன், தனது உயிர் போனாலும் பரவாயில்லை, நீங்கள் தப்பித்து விடுங்கள் என தனுமல்லையாவிடம் தெரிவித்தபோது, உடனடியாக அந்த மர்ம நபர்கள் தனுமல்லையாவின் மகள் அருணாவின் வாயை பொத்தி கழுத்தில் கத்தியை வைத்து பணம் தரவில்லை என்றால், கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளனர். உடனடியாக பணத்தை தந்து விடுங்கள் அவர்கள் மோசமானவர்களாக உள்ளார்கள் என கார் ஓட்டநர் உசேன், தணுமல்லையாவிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, பத்தாயிரம் ரூபாயை எடுத்து மர்ம நபர்களிடம் கொடுத்தபோது, அதிகப்படியான பணம் வேண்டும் என தெரிவித்தபோது, குறுக்கே தடுக்க வந்த தனுமல்லையாவின் மனைவியை அந்த நபர்கள் வெட்டியுள்ளனர். பின்னர் வீட்டின் பீரோவில் இருந்த இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மற்றும் 15 சவரன் நகைகள் மற்றும் தனுமல்லையாவின் வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சம் ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கிற்கு ஆன்லைன் மூலமாக பரிவர்த்தனை செய்துள்ளனர். இதனை அடுத்து காவல் துறையிடம் புகார் அளித்தால் கொன்று விடுவோம் என மிரட்டி விட்டு அந்த நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
7.40 லட்சம் ரூபாய் மற்றும் 15 சவரன் நகைகள் கொள்ளை போனது தொடர்பாக தனுமல்லையா குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, கார் ஓட்டுநர் உசேன் தலைமறைவாகி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், தனுமல்லையாவின் வங்கிக் கணக்கில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கிக் கணக்கை வைத்து விசாரணை நடத்தியபோது, விஜய் என்பவரின் வங்கிக் கணக்கிற்கு பணம் சென்றதும், விஜய் என்பவர் கார் ஓட்டுநர் உசேனின் நெருங்கிய நண்பர் என்பதும் தெரிய வந்ததால், கார் ஓட்டுநர் உசேன் கொள்ளை நாடகம் ஆடியதை போலீசார் கண்டுபிடித்தனர்.
பின்னர் போலீசார் வங்கிக் கணக்கு ஆதாரங்கள் மற்றும் செல்போன் எண்ணை வைத்து தாம்பரம் பகுதியில் பதுங்கி இருந்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த உசேன் (35), விஜய் (33) மற்றும் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சோமு (37) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட மூன்று பேரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள் என்பதும், இவர்கள் மூவரும் பொருளாதாரத்தில் பின் தங்கிய நபர்கள் என்பதும், உசேன் கார் ஓட்டுநர் ஆகவும், விஜய் ஆட்டோ ஓட்டுநராகவும், சோமு வேலையில்லாமலும் இருந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனால் எவ்வளவு நாட்கள் தொழிலாளியாகவே வேலை பார்ப்பது, பணக்காரராக மாற வேண்டும் எனக்கூறி கொள்ளையடிக்க மூவரும் திட்டமிட்டுள்ளனர். அப்போது கார் ஓட்டுநரான உசேன் தனது உரிமையாளரான தனுமல்லையாவிடம் அதிகப்படியான தங்கம் மற்றும் பணம் இருப்பதாகவும், ஒரே கொள்ளையில் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என திட்டம் போட்டு கொடுத்துள்ளார்.
பின்னர் சரியான நேரத்திற்காக காத்திருந்து தணுமல்லையாவின் வீட்டில் இவர்கள் கொள்ளையை அரங்கேற்றி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொள்ளையடித்தவுடன் போலீசார் நெருங்காமல் இருக்க திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு தப்பிச் சென்றதும், கொள்ளையடித்த பணத்தில் செல்போன் வாங்கி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
புதிதாக வாங்கிய செல்போனில் போன் பேசியதால் கொள்ளையர்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கொள்ளையடித்த 15 சவரன் நகைகளை சோமு தனது தொடர்பில் இருந்த பெண்ணிடம் கொடுத்து இருப்பது தெரிய வந்ததையடுத்து, சோமுவின் தோழியைப் பிடித்து விசாரணை நடத்தியபோது அடகு கடையில் வைத்திருப்பது தெரிய வந்தது. உடனே 15 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர்.
மொத்தமாக இவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 15 சவரன் நகைகள், ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணம் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், வங்கி பண பரிவர்த்தனை மூலமாக பரிமாற்றம் செய்யப்பட்ட 5 லட்சம் ரூபாயை உடனடியாக போலீசார் வங்கிக்கு தகவல் கொடுத்து முடக்கியதாக தெரிவித்துள்ளனர்.
ஒரே கொள்ளையில் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என எண்ணியவர்களை குமரன் நகர் போலீசார் புழல் சிறைக்கு அனுப்பிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: உடுப்பி கல்லூரி வீடியோ விவகாரம்: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ நேரில் விசாரணை!