சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே "மத்திய அரசு இந்தி மொழியை" திணிப்பதற்கு எதிராக திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'மத்திய அரசின் வேலைகளுக்கு ஆங்கிலத்திற்குப் பதில் இந்தி மொழியா? எனவும்; குடியரசுத்தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குழுவின் அறிக்கையினை நிராகரிக்க வேண்டும் எனவும்; இந்தி சமஸ்கிருதத்தை திணிக்காதே, இந்திய ஒற்றுமையினை குலைக்காதே எனவும் முழக்கமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழக துணைத்தலைவர் கலி பூங்குன்றன், 'மத்திய அரசு தமிழ்நாட்டில் "இந்தி மொழியை" திணிக்க முயற்சித்தால் கடுமையான போரட்டங்களைச் சந்திக்க நேரிடும் என்றும், பள்ளிக்கூடங்களில் இந்தியைத் திணித்தால் தேசியக்கொடி எரிப்புப்போராட்டம் நடத்தப்படுமென தந்தை பெரியார் 1955ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி தெரிவித்தார்.
மேலும் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் காமராஜரிடம் "இந்தி மொழி திணிக்கப்படாது" என உறுதி மொழி கொடுத்தபிறகு, அந்த போராட்டத்தை நிறுத்துவதாக கூறவில்லை, தற்காலிகமாக ஒத்திவைப்பதாக பெரியார் கூறினார்.
ஆகவே, மத்திய அரசு "இந்தி மொழியை" பல்கலைக்கழகம் உள்ளிட்ட எந்த இடத்தில் திணிக்க முயற்சித்தாலும் திராவிடர் கழகத்திற்கு என வரலாறு உண்டு, மத்திய அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' எனக்கூறினார்.
இதையும் படிங்க:"அரசு மருத்துவமனைகளில் காலாவதியாகாத மருந்துகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்"