இது தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறுகையில், "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கியிருப்பதை மனமார பாராட்டுகிறோம்.
இதன்மூலம் இந்த ஆண்டு மருத்துவம், பல் மருத்துவம் உள்பட மருத்துவப் படிப்புகளில் 400 -க்கும் மேற்பட்ட இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர முடியும்.
7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் மூலம், அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசு ஏற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோன்று நீதியரசர் கலையரசன் குழு பரிந்துரைப்படி 10 விழுக்காட்டை இட ஒதுக்கீடாக வழங்கியிருந்தால், இன்னும் கூடுதலான அரசுப் பள்ளி மாணவர்கள் பயன் பெற்றிருப்பார்கள்.
சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரும் கோரிக்கையை 2005ஆம் ஆண்டு முதல் வலியுறுத்திவருகிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி 2017ஆம் ஆண்டு செப். 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த நட்டாவிடம், இந்த இட ஒதுக்கீட்டை வழங்கிட இந்திய மருத்துவக் கழகத்தின் விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும்.
அகில இந்தியத் தொகுப்பு இடங்களிலும், மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை மனுவை நேரடியாக வழங்கியது. தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கமும் இக்கோரிக்கைகளை முன்வைத்து பல போராட்டங்களை நடத்தியுள்ளது.
பல்வேறு கல்வியாளர்களும் இக்கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்திவந்துள்ளனர். எனவே, யாருமே இந்தக் கோரிக்கையை முன்வைக்கவில்லை என முதலமைச்சர் பழனிசாமி கூறுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது கருத்து உண்மைக்குப் புறம்பானது. 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கொண்டுவந்ததில், அரசுக்கு எவ்வளவு பங்குண்டோ அதே அளவிற்கு எதிர்க்கட்சிகளுக்கும் பங்குண்டு. இந்த இட ஒதுக்கீட்டை 10 விழுக்காடாக அதிகரித்து, மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமின்றி இதர தொழிற் கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
அரசுப் பள்ளிகள் இல்லாத இடங்களில், அரசு உதவி பெறும் பள்ளிகளிலேயே ஏழை எளிய மாணவர்கள் பயில்கின்றனர். எனவே, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கென தனியாக ஒரு குறிப்பிட்ட விழுக்காடு இடங்களை மருத்துவக் கல்வியிலும், இதர தொழிற் கல்லூரிகளிலும் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் சிந்திக்க வேண்டும்" எனக் கோரிக்கைவைத்தார்.
இதையும் படிங்க: சூரப்பாவிற்கு ஆதரவாக இரண்டு மாணவர்கள் போராட்டம்!