சென்னை: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் மற்றும் மாநிலத் தலைவர் அறம் ஆகியோர் நேற்று (ஜன.27) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், “கடந்த 2005ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் 2,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிநியமனம் செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு மாதத் தொகுப்பூதியமாக, வெறும் 8,000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. அந்த மருத்துவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் எதிர்காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை பணி நியமனம் செய்யக்கூடாது என, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தொடர்ந்து போராடியது.
திமுக 2006ல் ஆட்சிக்கு வந்ததும், அக்கோரிக்கைகளை ஏற்று, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு பணி நிரத்தரம் வழங்கியது. இனி, ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட மாட்டார்கள என்றும் அறிவித்தது. அந்த வாக்குறுதியின் அடிப்படையில், கடந்த காலத்தில் திமுக ஆட்சியின்போது ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது திமுகவின் கொள்கை நிலைக்கு மாறாக, மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கங்கள் மூலம் நியமிப்பது சரியல்ல. இம்முயற்சியை கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் ஏராளமான பல் மருத்துவர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கின்றனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு நிரந்தர அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்காமல் ,தொடர்ந்து ஒப்பந்த முறையில்தினக் கூலி முறையில் அவர்களை நியமித்து வருவது சரியல்ல. அதுவும் மிக மிக குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. அதாவது 35,000 ரூபாய் மட்டுமே மாதத் தொகுப்பூதியம் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது பல் மருத்துவர்களின் சுயமரியாதையையும், கௌரவத்தையும் கேள்விக்குறியாக்குகிறது. செவிலியர்கள், பன்னோக்கு மருத்துவப் பணியாளர்கள் , ஆயுஷ் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரையும் தற்காலிக அடிப்படையில், ஒப்பந்த முறையில் நியமிப்பதை கைவிட வேண்டும்.
மாவட்ட நலச்சங்கம் மூலம் மருத்துவர்களையும், செவிலியர்களையும், லேப் டெக்னீசியன்களையும், மருந்தாளுநர்களையும், சுகாதார ஆய்வாளர்களையும், பல் மருத்துவ உதவியாளர்களையும், நகர சுகாதார செவிலியர்களையும், இதர பணியாளர்களையும் ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதை கைவிட்டு, அவர்களை மருத்துவப் பணியாளர் பணிநியமன வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தி நிரந்தர அடிப்படையில் பணி நியமனம் செய்திட வேண்டும்.
வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நேர்முகத் தேர்வு மூலம் பணி நியமனங்கள் செய்வதை கைவிட வேண்டும். அது ஊழலுக்கும், முறைகேடுகளுக்குமே வழிவகுக்கும். அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு, பதவி உயர்வு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
முதுநிலை மருத்துவம் பயிலும் அரசு பெண் மருத்துவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய, மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கோவிட் எம்ஆர்பி செவிலியர்களின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அவர்களுக்கு பணி பாதுகாப்பும், பணி நிரந்தரமும் வழங்கிட வேண்டும்.
எம்ஆர்பி மூலம் நியமிக்கப்பட்டு கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில், வெறும் 18,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்கள் அனைவருக்கும் உடனடியாக பணிநிரந்தரம் வழங்கிட வேண்டும். செவிலியர்களின் உழைப்பு கடுமையாக சுரண்டப்படுவதற்கு முடிவு கட்ட வேண்டும்.
ஒப்பந்த முறை பணிநியமனத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும், லேப் டெக்னீசியன்கள், டையாலிசிஸ் டெக்னீசியன்கள், ரேடியோ தெரபி டெக்னீசியன்கள், பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள், நடமாடும் மருத்துவமனை ஓட்டுநர்கள், அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், பிஹெச்சி ஆர்சிஹெச் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்.
பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு தொடர்ச்சியாக 8 மணி நேரம் மட்டுமே வேலை வழங்கிட வேண்டும். அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்கான உணவு மற்றும் விடுதி வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களிடம் , கட்டணக் குழுவால் நியமிக்கப்பட்ட கட்டணத்தை விட மிக அதிக கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேம்படுத்தி, அனைத்து சிகிச்சைகளையும் தரமான முறையில் முற்றிலும் இலவசமாக வழங்கிட வேண்டும். மக்கள்தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப புதிய மருத்துவமனைகளை உருவாக்கிட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் அனைத்தையும் முற்றிலும் இலவசமாக வழங்கிட வேண்டும்.
ஏழை மாணவர்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையங்களை உருவாக்கி, தரமான பயிற்சியை தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும். மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை வரும் 2023 - 2024க்கான பட்ஜெட்டில், மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிகப்படுத்திட வேண்டும்.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு அரசின் மருத்துவ இடங்களுக்கு மத்திய அரசு விலக்கு வழங்கிட வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத்தர வேண்டும்” என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் மர்ம நோய் பரவல்.. குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழப்பு...