எம்ஜிஎம் மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு இணை இயக்குநர் சுரேஷ் ராவ், கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஏற்படும் நுரையீரல் பாதிப்புகள் குறித்து நமது ஈடிவி பாரத் தமிழ்நாடுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
கேள்வி: கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் நுரையீரல் தொற்று ஏற்பட்டு, உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஏன்?
பதில்: கரோனா தொற்று இரண்டாவது அலையின் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது வருத்தமளிக்கிறது. முதல் அலையை விட இரண்டாவது அலையில் இளைஞர்கள் அதிகளவில் உயிரிழந்து வருகின்றனர். தொற்றுக் கிருமி உருமாறி உள்ளதே இதற்கு காரணமாகும். நோயினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது சிகிச்சை அளிப்பதிலும் சிரமம் உள்ளது. போதுமான அளவில் மருத்துவர்கள், செவிலியர் இல்லாமல் படுக்கை வசதி கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதனால் நோய் தொற்றின் தாக்கம் அதிகரிக்கிறது.
கரோனா தொற்று மூக்கு, வாய் பகுதியில் இருக்கும் வரையில் பாதிப்பு ஏற்படாது. ஆனால் தொற்று நுரையீரலுக்குச் சென்றால் பாதிப்பு அதிகரிக்கக் கூடும். நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் மருந்துகளின் மூலம் சிலருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
நுரையீரல் செயல்படாவிட்டால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையத் தொடங்கிவிடும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்தப் பின்னர் மற்ற உடல் உறுப்புகளின் செயல்பாடுகளும் குறையத் தொடங்கிவிடும். இதனால் சைலன்ட் ஹைபாக்சியா என்ற நோய் தொற்று ஏற்படும். இதனால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எம்ஜிஎம் மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு எக்மோ சிகிச்சை அளித்து, நுரையீரல் செயல்படாமல் நிறுத்தி வைத்து, மற்ற உறுப்புகளுக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் செல்வதற்கான முறையை செய்து வருகிறோம். இந்த வசதியை எல்லா மருத்துவமனைகளிலும் செய்ய முடியாது. இதற்கு தேவையான கருவிகள் நிறுவப்பட்டு, மருத்துவர்கள், செவிலியர் நியமனம் செய்யப்பட வேண்டும்.
கருப்பு பூஞ்சை நோய் தொற்று கரோனா பாதித்தவர்களை தாக்குவது அதிகரித்து வருகிறது. இந்த நோய் வந்தால் குணப்படுத்துவது மிகவும் சிரமமானது. கருப்பு பூஞ்சை நோய் நுரையீரலை தாக்கினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் செய்யுவும்.
கேள்வி: கருப்பு பூஞ்சை நோய், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் தாக்குமா?
பதில்: கருப்பு பூஞ்சை நோய் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் வராது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஸ்டீராய்டு மருந்து எடுத்துகொள்பவர்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு அந்த நோய் தாக்க வாய்ப்புள்ளது. கருப்பு பூஞ்சை தண்ணீரிலும் இருக்கிறது. இதில் உள்ள மாசை எதிர்க்கும் தன்மை உடலில் இருந்தால் கருப்பு பூஞ்சை தாக்காது. ஆனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.
கேள்வி: இந்த இரண்டாவது அலையில் எத்தனை நாள்களில் நுரையீரல் தொற்று ஏற்படுகிறது?
பதில்: முதல் ஏழு நாள்களில் இந்த நோயின் தாக்கம் அந்தளவுக்கு இருக்காது. காய்ச்சல் இருந்தால் முதலில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். ஏழு முதல் 14 நாள்கள் மிகவும் முக்கியமான காலக்கட்டமாகும். இந்தக் காலத்தில் ஒருவர் நன்றாக இருந்தால், அதன் பின்னர் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் கிடையாது. ஏழு நாள்களுக்கு பின்னர் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டால் தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
கேள்வி: நுரையீரல் தொற்று ஏற்படாமல் இருக்க எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்?
பதில்: கரோனா தொற்று வராமல் முதலில் நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை கடைப்பிடித்தல், கூட்ட நெரிசலைத் தவிர்த்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். கரோனா பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டால், முகக்கவசம் அணிந்து , நம்மால் மற்றவர்களுக்கு தொற்று வராத வகையில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். தொடர்ந்து ரத்தத்தில் ஆக்சிஜன் அளவினை பரிசோத்தித்து கொண்டே இருக்க வேண்டும்.
ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு நன்றாக இருந்தாலும், ஆறு நிமிடங்கள் நடந்தப் பின்னர் ஆக்சிஜன் அளவினை பரிசோதிக்க வேண்டும். ஆக்சிஜன் அளவு குறைந்தால் நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்பதை சிடி ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டும். பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மனவலிமையோடு சிகிச்சை பெற வேண்டும்.
இதையும் படிங்க: EXCLUSIVE: '2,943 ஆக்சிஜன் கருவிகள் வாங்குவதற்கு நடவடிக்கை'- ககன்தீப் சிங் பேடி