சென்னை - வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள தேனாம்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமையில் கரோனா தடுப்பு கலந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் , "சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு உதவும் பணியை கடமையாக கருதுவது திமுக.
அந்த வகையில் கரோனா தடுப்புப் பணிகளை வேகப்படுத்துவது, மக்களை கரோனா தொற்றிலிருந்து காப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து வருகிறோம். அதன் பயன் ஓரிரு வாரங்களில் தெரிய வரும்.
ஊரடங்கு காலத்தில் மக்கள் யாரும் தேவையில்லாமல், வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். முகக் கவசம் அணிய வேண்டும். தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். இவையே தமிழ்நாடு முதலமைச்சரின் அன்பான வேண்டுகோள்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: கடலூர் ரசாயன ஆலை வெடிவிபத்து: ஸ்டாலினிடம் பூவலகின் நண்பர்கள் கோரிக்கை