சென்னை: சென்னை பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை அருகே கடந்த 8ஆம் தேதி போக்குவரத்து காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக No Entryயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்றது.
அந்த ஆட்டோவை போக்குவரத்து எஸ்ஐ ஒருவர் மடக்கிப் பிடித்தார். அப்போது ஆட்டோவில் கர்ப்பிணி இருப்பதைப் பார்த்த அவர், அபராதம் ஏதும் விதிக்காமல் ஆட்டோவை உடனடியாகச் செல்ல அனுமதித்தார். அப்போது அதில் பயணம் செய்த ஒருவர், 'No entry' எச்சரிக்கைப் பலகை ஏன் இல்லை? எனக்கேட்டு போக்குவரத்து எஸ்.ஐ.யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதையின் தொடக்கத்தில் 'No entry' எச்சரிக்கைப் பலகை ஏற்கெனவே இருக்கின்றது என போக்குவரத்து போலீஸார் தெரிவித்தார். இந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து No Entryயில் சென்ற குறிப்பிட்ட ஆட்டோவிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், No Entryயில் வாகனங்களை ஓட்ட வேண்டாம் என போக்குவரத்து காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாகன ஓட்டிகள் தவறான பாதையில் பயணிப்பதால், போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுவதாகவும், விபத்துகள் ஏற்படுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ள போக்குவரத்து போலீசார், அனைவரும் போக்குவரத்து விதிகளை பின்பற்றும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:'போதையில் அண்ணனுக்கு கத்திக்குத்து' - குடிகாரத்தம்பி கைது!