சட்டப்பேரவைத் தேர்தல் களம் கொதிக்க தொடங்கிவிட்டது. திமுக, அதிமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் என பல முனைத் தாக்குதல்களை தமிழ்நாடு சந்திக்கப்போகிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் தேர்தல் கதாநாயகர்கள் வந்திருக்கிறார்கள்.
பொதுவாக திமுகவின் தேர்தல் அறிக்கைகள் என்றாலே இலவசம் என்று அனைவரது மனதிலும் பதிந்திருக்கிறது. ஏனெனில், அண்ணாவின் அரிசி ஆரம்பித்து கருணாநிதியின் இலவச டிவி வரை நின்றது.
ஆனால், இந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுகவின் தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் குறைந்திருக்கின்றன. வீட்டுப் பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை முக்கிய இலவசமாக பார்க்கப்படுகிறது. (அதை அதிமுக காப்பி அடித்தது வேறு கதை, ஆண்டவர் அத நாந்தான் படைச்சேன் என்று சொல்கிற கதை வேறு)
இதனையடுத்து, நகர்ப்புற பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற இலவசம் மிகப் பெரிய முக்கியத்துவத்தை கொடுத்துள்ளது.
மிக மிக முக்கியமாக, சாலையோரம் வசிப்பவர்களுக்கு இரவு நேரக் காப்பகங்கள் அமைக்கப்படும் என்று கூறியிருக்கிற இலவசம், அறிக்கையிலே அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறது.
அதேபோல், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலையில் ஊட்டச்சத்தாக பால் வழங்கப்படுமென உறுதியளித்திருக்கிற இலவசமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
புலி 10 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் கணக்காக, அதிமுக இலவசங்களை அள்ளி வீசியிருக்கிறது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என அதிமுக மாஸ் காட்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி, திமுக 1000 கொடுத்தால் நாங்க 1500 ரூபாய் கொடுப்போம்னு கூறியுள்ளது, இலவச சோலார் அடுப்புகள், முதியோர்கள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தியது என அதகளமாடி இருக்கிறது அதிமுக.
ஒரு பக்கம் இலவசங்களை எதிர்க்கும் கட்சிகள் நிற்க, திமுகவும், அதிமுகவும் நிறைய அளித்திருக்கின்றன. இதன் தாக்கம் எவ்வாறு இருக்கப்போகிறது என்ற பிபி எல்லாருக்கும் ஏற தொடங்கியிருக்கிறது.
இது இப்படி இருக்க சிஏஏ சட்டம் குறித்து முக்கியத்துவம் கொடுக்கப்படாத அறிக்கையை திருத்திவிட்டு மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டது திமுக. சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்திய அதிமுக அரசு, சிஏஏவை நீக்க வலியுறுத்துவோம் என்று கூறுகிறது. ஆனால், அப்படி கூறிய சில மணி நேரங்களிலேயே பாஜவின் தேசிய செயலாளரும், தமிழகப் பொறுப்பாளருமான சி.டி. ரவி இச்சட்டத்தை நீக்கமாட்டோம். அதிமுகவிடம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதியை திரும்பப் பெற வலியுறுத்துவோம் என்று பகிரங்கமாகவே மிரட்டல் விடுக்கிறார்.
இலங்கை மக்கள் மீது இரண்டு கட்சிகளுக்கும் இப்போது வந்திருக்கும் அக்கறை சொல்லி மாளாது. ஐநாவிடம் வலியுறுத்துவோம், இங்கிருக்கும் அகதிகளுக்கு இந்திய குடியுரிமைச் சட்டம் வாங்குவோம் என்று திமுக ஆட்டத்தை ஆரம்பித்துவைக்க, இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என்று அதிமுகவும் ஆட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறது.
எது எப்படியோ ஈழத் தமிழர்களுக்காக இரண்டு கட்சிகளும் இனியாவது ஈரம் சிந்த வேண்டுமென்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகவும் இருக்கிறது.
வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என அதிமுக அறிவித்திருப்பது, நிச்சயமாக திமுக பக்கம் இருக்கும் அரசு ஊழியர்களின் வாக்குகளை தன் பக்கம் திருப்புவதற்கான யுக்தி என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஆகமொத்தம், தேர்தல் எனும் மகாபாரத போரில் அறிக்கை என்னும் அஸ்திரத்தை கையில் எடுத்துவிட்டார்கள். போரின் முடிவு மே இரண்டாம் தேதி தெரிந்துவிடும்.