இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "பூண்டி, புழல் இவை இரண்டும் காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்.
- நெம்மேலி, வடசென்னை இவை கடல்நீரை குடிநீராக கருணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்.
- செம்பரம்பாக்கம், போரூர், சோழவரம் ஆகிய மூன்றும் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது குடிநீருக்காக மாற்றப்பட்ட ஏரிகள்.
- கிருஷ்ணா நதிநீர் திட்டம் கருணாநிதியால் நிறைவேற்றப்பட்டு, சென்னைக்கு கிருஷ்ணா நீர் கொண்டு வந்து கொடுத்தார்.
- புதிய வீராணம் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டம்.
இத்தனை திட்டங்கள் இருந்தும் சென்னை மக்களுக்கு நாள் ஒன்றுக்கு தர வேண்டிய ஆயிரத்து 200 எம்எல்டி-க்கு பதில் 700 எம்எல்டி -தான் தரப்படுகிறது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களையும், கிருஷ்ணா நதிநீர் திட்டத்தையும் கருணாநிதி கொண்டு வந்ததோடு, செம்பரம்பாக்கம், போரூர், சோழவரம் ஆகிய பாசன ஏரிகளை குடிநீருக்கான ஏரிகளாக மாற்றாமல் இருந்திருந்தால், இந்த 700 எம்எல்டி தண்ணீர், சென்னை மக்களுக்கு குடிநீராக கிடைத்திருக்காது.
அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட புதிய வீராணத் திட்டம் வெறும் 180 எம்எல்டி கொண்ட திட்டம். இது தவிர, அதிமுக ஆட்சியில் சென்னை மக்களின் குடிநீருக்காக சிறு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை. குடிநீருக்கென மலை மலையான திட்டங்களை அறிவித்தார்கள். ஆனால், பத்தாண்டுகளாக படுத்துக் கொண்டே இருந்தது இந்த திட்டங்கள்.
2012ஆம் ஆண்டு சட்டப்பேரவையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 110-விதியின் கீழ் ஒரு அறிக்கையை படித்தார்கள்.
நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டமொன்று நெம்மேலியில் அமைக்கப்படும் என்று அறிவித்தார். பத்தாண்டுகளாக மறந்துபோன திட்டத்தை ஸ்டாலினும், நானும் திருப்பி திருப்பி சட்டப்பேரவையில் கேட்ட பிறகு, இந்த திட்டத்திற்கு நிதியை கடனாக தருகின்ற ஜெர்மன் நாட்டு நிதி நிறுவனமான (KIW) வேலை தொடங்குங்கள் இல்லாவிட்டால், நிதியுதவி கிடைக்காது என்று சொன்ன பிறகு, இந்த திட்டத்திற்கு மானியமாக நிதியுதவி அளிக்க முன்வந்த அம்ரூட் திட்டமும் மிரட்டியதற்கு பிறகு, ஜூன் 27ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி இந்த திட்டம் 1259.38 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்து அடிக்கல் நாட்டியிருக்கிறார். ஆக, ஒரு திட்டத்தை அறிவித்து, அந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட, பத்து ஆண்டுகள் ஆகியிருக்கிறது அதிமுக அரசுக்கு.
சபாஷ் சரியான சாதனை
இந்த அதிமுக ஆட்சி தொடர்ந்தால் திட்டம் நிறைவேற முப்பது ஆண்டுகளாகும். இந்தத் திட்டத்தோடு அறிவித்த பட்டிபுலம் திட்டம் 400 எம்எல்டி என்ன ஆனது என்றே தெரியவில்லை. அதுவரை சென்னை மக்கள் தாகத்தை தாங்கிக் கொள்ள வேண்டும் என்றுகூட கூறுவார்கள். இந்த ஆட்சியில் இருப்போருக்கு தீர்க்க தரிசனம் என்பது அறவே கிடையாது என்பதற்கு ஓர் உதாரணம். ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் அணையிலிருந்துதான் நாம் கிருஷ்ணா நீரை எடுக்கிறோம்.
ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவரப்படி ஸ்ரீசைலம் அணையிலிருந்து 4 லட்சத்து 34 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர், அதாவது 37 டிஎம்சி நீர் வீணாக கடலுக்கு போகிறது. வரும் வழியில் சோமசீலா அணை, கண்டலேறு அணை ஆகிய நீர்த்தேக்கங்களில் கிருஷ்ணா நீரை தேக்கி, அதன் பின்னர் தான் நாம் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணாநதி நீரை கொண்டு வருகிறோம்.
சோமசீலாவில் 33 டி.எம்சி இருக்கிறது. அங்கு 23 டி.எம்.சி. இருந்தாலே தமிழ்நாடு அங்கு தண்ணீர் எடுக்கலாம். கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இப்போது 20 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது. நாம் அந்த நீர்த்தேக்கத்தில் 8 டிஎம்சி நீர் இருந்தாலே தண்ணீர் எடுக்கலாம். அதிமுக அரசு ஆந்திர அரசை தண்ணீர் கேட்டு ஒரு கடிதம் கூட எழுதவில்லை என்பதுதான் ஆச்சரியம். கேட்டால், நமக்கே மழை சீசனில் தண்ணீர் வரும் என்பார்கள்.
இப்படித்தான் ஒவ்வொரு ஆண்டும் சொல்கிறார்கள். கடைசியில் சென்னைக்கு குடிநீர் பிரச்னை தீர்ந்தபாடில்லை. “நாளைக்கு வரும் பலாக் காயைவிட, இன்றைக்கு கிடைக்கம் கலாக் காயே மேல்” என்று பழமொழி உண்டு" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்ப் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக - ஸ்டாலின் பதிலடி