மதுரை: மதுரையில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி (நவ.18) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாநில நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துக்கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், கூட்டுறவுத் துறை வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனக்கு திருப்தி இல்லை என வெளிப்படையாக கூறினார்.
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இந்த கருத்து திமுகவினரை அதிருப்தியில் ஆழ்த்தியது. குறிப்பாக தென் மாவட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சராக வலம் வரும் ஐ.பெரியசாமியின் துறையை விமர்சித்துள்ளது திமுகவினர் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கருத்துக்கு, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி கொடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கலந்துக்கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கூட்டுறவுத் துறையில் திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெற வேண்டும். மக்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம் அதற்காக மட்டுமே பயணிக்கிறோம், மக்களை திருப்திப்படுத்தினால் போதும் ஒருவேளை ரேஷன் கடையையே தெரியாதவர்கள் திருப்தி அடையவில்லை எனக் கூறுவதில் எங்களுக்கு கவலை இல்லை. முதலமைச்சர், துறை அதிகாரிகள் பொதுமக்கள் திருப்தியாக இருக்கும் போது ஒருவர் மட்டும் திருப்தி அடையவில்லை என்று கூறினால் எங்கு குறை உள்ளது என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்" என்று தடாலடியாக பதில் அளித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி வேலைவாய்ப்பு முதல் அனைத்து திட்டங்களையும் மக்கள் திருப்தி படும் அளவிற்கு செய்து வருகிறது கூட்டுறவுத்துறை என கூறினார். மாநில நிதியமைச்சரே, கூட்டுறவுத் துறையை விமர்சனம் செய்யும் அளவுக்கு தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என எதிர்க்கட்சிகள் பேசும் அளவுக்கு அமைச்சர்களின் கருத்து மோதல் விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இதையும் படிங்க: அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அதி நவீன தண்டுவட அறுவை சிகிச்சை