சென்னை: புரசைவாக்கம் எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (34). இவர் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் காவலர் கார்த்திக், தனது உறவினர் பிரவீன் என்பவர் உடன் டாடா ஏஸ் வாகனத்தில் சென்று மாநகராட்சி வளாகத்தில் இருந்து பேரிகார்டுகளை எடுத்துச் சென்று தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்துள்ளார்.
பின்னர், வாகனத்தில் வீட்டிற்கு செல்லும்போது சந்தியப்பன் தெரு குறுக்கே பேரிகார்டு வைக்கப்பட்டிருந்ததால், காவலர் கார்த்திக் மற்றும் பிரவீன் ஆகியோர் பேரிகார்டை தள்ளி வைக்க முயன்றுள்ளனர். அப்போது அங்கு வந்த சாமிக்கண்ணு என்பவர், கோயில் திருவிழாவுக்காக சாலையின் குறுக்கே பேரிகார்டு வைத்திருந்ததாக கூறியிருக்கிறார். பேரிகார்டு இருந்தால் எப்படி வாகனத்தை திருப்ப முடியும் என கார்த்திக் கூறியதால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க :அண்ணன் பிறந்தநாளில் கேக் சாப்பிட்டு உயிரிழந்த தம்பி!
அந்த நேரத்தில் சாமிகண்ணுவின் மகன்களான மைனர் பாபு மற்றும் ஸ்டாலின் ஆகியோர் வந்து தனது தந்தையை எதிர்த்து பேசுகிறாயா எனக் கேட்டு காவலர் கார்த்திக் மற்றும் பிரவீனை தாக்கியதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த காவலர் கார்த்திக் மற்றும் பிரவீன் ஆகியோர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலக காலனி போலீசார் நடத்திய விசாரணையில், காவலர் கார்த்திக்கை தாக்கிய நபர்களான சாமிக்கண்ணு திமுக திருவிக நகர் தொகுதி தெற்கு பகுதி செயலாளராகவும், அவரது மகன் மைனர் பாபு (38) திருவிக நகர் பகுதி மாணவரனி துணை அமைப்பாளராக இருந்து வருவதும் தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே சாமிக்கண்ணு மீது தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்பட 15 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவலரை தாக்கியதாக மூன்று பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க:கடலில் வீணாக கலக்கும் நீரை சேமிக்க தமிழகத்தில் இதுவரை எந்த திட்டமும் இல்லை - உயர் நீதிமன்றக்கிளை