சென்னை: ராமாபுரம் திருவள்ளுவர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை ஒட்டி தீமிதி திருவிழா நடைபெற்றது. தீமிதி திருவிழாவுக்காக ராமாபுரம் உதவி ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது திருவிழாவிற்கு வந்த நபர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 22 வயது பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் காவலர் உடனே உதவி ஆய்வாளர் கோபாலிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் போலீசார் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ராமாபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த கார் மெக்கானிக் கண்ணன்(51) என்பதும், இவர் திமுகவில் உறுப்பினராக இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து கண்ணன் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண்ணின் அடக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுதல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதற்கிடையே திமுக மாமன்ற உறுப்பினர் ராஜி மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் சண்முகம் ஆகியோர் காவல் நிலையத்திற்கு வந்து கண்ணனை கைது செய்ய கூடாது என காவல் ஆய்வாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் பெண் காவலர் புகார் அளிக்க மறுப்பு தெரிவித்த போதிலும், சம்பவ இடத்திலிருந்த உதவி ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் என்பவரிடம் புகார் மனுவை பெற்று கைது நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதே போல கடந்த ஜனவரி மாதம் திமுக சார்பில் நடந்த கூட்டத்தில் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் சர்ச்சையாகி திமுக நிர்வாகிகள் பிரபு மற்றும் ஏகாம்பரம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.