இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜகவின் விவசாயிகள் விரோத மசோதாக்களை, பஞ்சாப் மாநிலம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களும், பா.ஜ.க.,வின் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி - வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. 13 கட்சிகள் அந்த மசோதாக்களை எதிர்க்கின்றன. அதிமுக உள்ளிட்ட நான்கு கட்சிகள் மட்டும் ஆதரிக்கின்றன.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம், ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து தனது மேஜையில் வைத்துக் கொண்டு ஊன்றிப் படித்துப் பார்த்துவிட்டு அல்லது அவற்றை அறிந்தோர் படிக்க, பக்கத்திலிருந்து கேட்டுவிட்டு முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி அடையாமல் உறுதியாக வருவாய் கிடைக்கும் என்கிறார் முதலமைச்சர். பண்ணை ஒப்பந்தம் போடும் போதே தரம், அளவு, விலை போன்றவற்றை விவசாயி உறுதி செய்ய வேண்டும். அந்த விளை பொருட்களை டெலிவரி கொடுக்கும் போது ஒப்பந்தப்படி தரமாக உள்ளது என மூன்றாவது நபர் சான்றிதழ் அளிக்க வேண்டும் என்பதெல்லாம் ஒப்பந்த ஷரத்துகளாக இருக்கின்றன.
இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எந்த வகையிலும் பாதகம் ஏற்பட்டு விடாமல் பாதுகாக்கவே தவிர - மழையிலும், புயலிலும் எல்லாக் காலங்களிலும் இன்னல்களால் பாதிக்கப்படும் முதலமைச்சரின் நேற்றைய ஆறு பக்க ஆதரவு அறிக்கையை நிராகரிக்கும் வகையில் இன்றைக்கு மூத்த அரசியல் தலைவரும், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் இந்த வேளாண் சட்டங்களைக் கடுமையாக எதிர்த்துப் பேசியுள்ளார்.
மக்களவையில் ஆதரவு, மாநிலங்களவையில் எதிர்ப்பு என்ற அதிமுகவின் நகைச்சுவைக்குப் பிறகு இப்போது முதலமைச்சரின் முன்பு இருப்பது ஒரேயொரு வழி என்னையும், எனது அமைச்சர்களையும் பாதுகாத்துக் கொள்ள உங்களைப் பலிபீடத்தில் ஏற்ற முயற்சி செய்து பார்த்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்து விவசாயப் பெருமக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேளுங்கள், அதுதான் நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகு! தற்காலிகப் பாதுகாப்புக் கவசம்” என குறிப்பிட்டுள்ளார்.