சென்னை: இன்று நடந்த சட்டப்பேரவையில் இருந்து திமுக அரசைக் கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்,
அதில், ”கடந்த 8 மாத கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இந்த எட்டு மாத காலத்தில் கொலை,கொள்ளை,திருட்டு, பலாத்காரசம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை:
திமுக ஆட்சியில் பெண்களுக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா போன்ற போதை விற்பனை அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரம், கட்டப்பஞ்சாயத்துக் கலாசாரம் தலைதூக்கியுள்ளது.
வடகிழக்குப் பருவமழையில் பல வீதிகளில் மழை நீர் தேங்கி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். உணவு கிடைக்காமல் மக்களும் பால் கிடைக்காமல் குழந்தைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வாரும் பணிகளைத் திமுக அரசு செய்யவில்லை.
2015இல் பெரிதாகப் பாதிப்பு ஏற்பட்டபோது, அதிமுக அரசு ரூ.5 ஆயிரம் வழங்கியது. ஆனால், திமுக அரசு எந்தவிதமான நிவாரணத் தொகையையும் வழங்கவில்லை.
மக்களை திமுக ஏமாற்றிவிட்டது:
தமிழ்நாடு மக்கள் தைப்பொங்கலைச் சிறப்பாக கொண்டாட ரூ.2500 கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.
ஆனால், திமுக ஆட்சியில் பொங்கல் பரிசாகப் பணம் ஏதும் வழங்கப்படவில்லை. இது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
ஏழை எளிய மக்கள் அந்தந்தப் பகுதிகளிலேயே பயன்பெறும் வகையில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன.
ஆனால், திமுக அரசு அது அம்மா பெயரில் செயல்படுவதால், காழ்ப்புணர்ச்சி கொண்டு அதனை மூடி உள்ளது.
வெள்ள நீரால் நெற்பயிர்கள் மூழ்கி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை.
விசாரணை என்ற பெயரில் காவல் துறையால் அதிமுக நிர்வாகிகள் துன்புறுத்தப்படுகிறார்கள். திமுக அரசால் பொய் வழக்குகள் போடப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு காவல் துறை, தமிழ்நாடு அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது.
இவற்றையெல்லாம் கண்டித்துத் தான் இன்றைய தினம் திமுக அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை நம்பி 48 லட்சம் பேர் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்றனர். ஆனால், தற்போது 13 லட்சம் பேர் மட்டுமே தகுதியானவர்கள் எனக் கூறி ஏமாற்றி உள்ளது இந்த அரசு”எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:போலி கரோனா பரிசோதனை சான்றிதழ்தாரர்கள் மீது கடும் நடவடிக்கை - ககன்தீப் சிங் பேடி