க. அன்பழகன் மறைவிற்குப் பின்பு காலியாக இருந்துவரும் திமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்வு வருகின்ற மார்ச் 29ஆம் தேதி பொதுக்குழுக்கூட்டத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், "மார்ச் 16ஆம் தேதி கடிதத்தின் வாயிலாகத் துரைமுருகன், பொதுச்செயலாளர் பதவிக்கு தான் போட்டியிட விழைவதாகவும் அவர் தனது பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் என்னிடம் தெரிவித்துள்ளதை ஏற்றுக்கொள்கிறேன்.
எனவே, வருகின்ற மார்ச் 29ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர், பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும். அதில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், கோவிட்-19 பரவாமல் தடுக்கும்வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வண்ணம் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் அடிப்படையில் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பொதுக்குழுக்கூட்டம் ஒத்திவைப்படுவதாகவும், பொதுக்குழுக்கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இன்று மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
மேலும், மார்ச் 31 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள திமுக நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒத்திவைத்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் கரோனா டிடிவி - அதிமுக நிர்வாகி புகழேந்தி விமர்சனம்!