சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் சவுந்தரராஜன் நேற்று (ஏப்ரல் 3) காலை வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக எஸ்பிளனேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இதற்காக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டுவந்தது. அப்போது, கொலையாளிகள் ஆட்டோவில் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு, ஆட்டோ எண் வைத்து அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் கணேசன், அவரது மகன் தினேஷ் குமார், இன்பா, கார்த்திக், குமரேசன் ஆகியோர் இன்று (ஏப். 4) செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2இல் சரணடைந்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வியாசர்பாடியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவரை எஸ்பிளனேடு காவல்துறையினர் கைது செய்தனர்.
தண்ணீர் பந்தல் விவகாரத்தில் கொலை: சரண் அடைந்துள்ள அதிமுக பிரமுகர் கணேசனுக்கும், கொலை செய்யப்பட்ட சவுந்தரராஜனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சுவர் விளம்பரம் எழுதுவதில் கணேசனுக்கும் சவுந்தரராஜனுக்கும் மோதல் நடந்துள்ளது. இது தொடர்பாக கடந்த மாதம் சவுந்தரராஜன் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் கணேசன் மீது கொலை மிரட்டல் புகார் அளித்துள்ளார். காவல்துறையினரும் இது குறித்து விசாரணை நடத்தி உள்ளனர்.
வழக்கமாக, அதிமுக சார்பில் பிராட்வே பேருந்து நிலையத்திற்குள் தண்ணீர் பந்தல் அமைக்கப்படும். ஆனால் சவுந்தரராஜன் திமுகவில் சேர்ந்த பிறகு பிராட்வே பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிமுக பிரமுகர் கணேசனுக்கும் சவுந்தரராஜனுக்கும் மோதல் ஏற்பட்டு, சவுந்தரராஜன் கொலையானதாக கூறப்படுகிறது. இருப்பினும் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள ஐந்து பேரையும் காவலில் எடுத்து மேலும் விசாரணை நடத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ராமராஜ்ஜியத்தை அதிமுக கொடுக்கும் - செல்லூர் ராஜூ