திமுக எம். பி.க்கள் டி ஆர் பாலு, வில்சன், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோர் இன்று காவல்துறைத் தலைவரை சந்தித்து புகார் மனுக்களை அளித்தனர்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், "திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உள்ளிட்டோர் மீது ஒரே புகாரின் அடிப்படையில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சட்டத்தை மீறும் செயல். ஒரு புகாரின் மீது ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் பல வழக்குகள் பதிவு செய்து, திமுகவினர் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுகின்றனர்.
தேர்தல் வரவுள்ள நிலையில், எங்களை தேர்தல் பணி செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். மத்திய மாநில அரசுகள் தங்களுக்கு எதிராக எவ்வித கருத்துக்களும் எழக்கூடாது என நினைகின்றன.
மக்களின் அடிப்படை உரிமையான கருத்து சுதந்திரத்தை மறுக்கும் வகையில் அவர்கள் செயல்படுகின்றனர். அவற்றையும் மீறி அரசின் நடவடிக்கைகள் குறித்து திமுகவினர் கேள்வி எழுப்பினால், அவர்கள் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. குறிப்பாக, திமுக தொழில்நுட்ப பிரிவினர் மீது அதிகளவு வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
அதே சமயம் அதிமுகவினர், திமுகவினர் மீது தவறான நோக்குடன் அவதூறு பரப்பினாலும், நீதிமன்றத்தை அவமதித்தாலும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதனை கண்டித்து புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தலைமைச் செயலர் எங்களை அவமதித்துவிட்டார் -டி.ஆர். பாலு குற்றச்சாட்டு