தென்சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் களமிறக்கப்பட்டார். இவர் அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தனை எதிர்த்துப் போட்டியிட்டார். இந்நிலையில் இன்று காலை முதல் மக்களவைத் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்த தமிழச்சி தங்கபாண்டியன் ஜெயவர்த்தனைக் காட்டிலும் ஐந்து லட்சத்து 24,316 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்ல உள்ளார்.
சுமதி என்னும் தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கப்பாண்டியன் என்னும் புனைப்பெயரால் அறியப்படும் த. சுமதி, பெண் கவிஞர் & சமூக ஆர்வலரும் ஆவார். விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு என்னும் சிற்றூரில் பிறந்தவர் .இவர் தமிழகத்தின் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சரான வி. தங்கப்பாண்டியனின் மகள் ஆவார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சரான தங்கம் தென்னரசு இவருக்கு தம்பி ஆவார்.
கல்வியில் ஆர்வம் கொண்ட தமிழச்சி
மல்லாங்கிணற்றில் தொடக்கக் கல்வியும் விருதுநகரில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியும் பெற்றார். மதுரையில் உள்ள மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி, பின்னர் மதுரை தியாகராயர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்று இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை புலம்பெயர் தமிழர்களின் ஆங்கில படைப்பிலக்கிய வெளிப்பாடுகள் என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார்.
தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளராக தேர்தல் அரசியலில் முதல் முறையாக கால் பதித்திருக்கிறார் தமிழச்சி தங்க பாண்டியன். எஞ்சோட்டுப் பெண், வனப்பேச்சி, பேச்சரவம் கேட்டிலையோ, மஞ்சணத்தி உள்ளிட்ட கவிதை நூல்களையும், கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார். அவரது சிறுகதைகள் பிரபல தமிழ் வார இதழ்களில் வெளியாகி இருக்கிறது.
துவண்டு கிடந்து மக்களின் ஆதரவோடு கிடைத்துள்ள வெற்றியின் மூலம் திமுக தமிழ்நாட்டில் மிகப்பெரும் ஆளுமையைக் கொண்டுள்ளது.