ETV Bharat / state

’தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று’ - இயக்குநர் பாரதிராஜா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவின் 100ஆவது பிறந்தநாள் இந்த மாதம் வர உள்ள நிலையில், இயக்குநர் பாரதிராஜா அவருக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சங்கரய்யா
சங்கரய்யா
author img

By

Published : Jul 2, 2021, 1:06 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா குறித்து இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் சுதந்திரத்திற்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடி எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, 80 ஆண்டுகள் மக்கள் பணி செய்து, இன்றைக்கும் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் தோழர் என்.சங்கரய்யா.

100ஆவது வயதில் அடியெடுத்து வைக்க உள்ள சங்கரய்யா

ஜூலை மாதம் 15ஆம் தேதி அன்று அவருக்கு 99 வயது முடிந்து நூறாவது பிறந்த நாள். இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிகச் சில சுதந்திரப் போராட்ட வீரர்களில் தோழர் என்.சங்கரய்யாவும் ஒருவர். வெள்ளையர்களின் ஆட்சியை எதிர்த்து, பொது வெளியிலும் சிறையிலிருந்தும் தலைமறைவாகவும் அவர் புரிந்த போராட்டங்கள் பல!

”சமூக சீர்திருத்தம் என்பது இந்திய சுதந்திரம் இல்லாமல் முழுமையடையாது" என்று அவர் உறுதியாக நம்பினார். இதனால் ஆங்கிலேய அரசை கடுமையாக எதிர்த்தார். 1941ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி தோழர் சங்கரய்யாவை ஆங்கிலேய அரசு கைது செய்தது.

பொதுவுடமை தத்துவத்தின்படி வாழ்பவர்

வேலூர் ஜெயில், ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி ஜெயில் போன்றவற்றில் அடைக்கப்பட்டவர், பல மாதங்களுக்குப் பிறகு விடுதலையானார். இவரோடு மாணவ இயக்கத்தில் கலந்து கொண்ட பலரும், பட்டப்படிப்பு முடிந்தபிறகு முக்கியமான ஆளுமைகளாக அறியப்பட்டனர்.

ஒருவர் தமிழ்நாட்டின் முதல்வரானார், இன்னொருவர் நீதிபதியானார், அடுத்தவர் ஐஏஎஸ் அலுவலராக முதலமைச்சருக்கு தனிச் செயலாளராக பணிபுரிந்தார். தோழர் சங்கரய்யா மட்டும் தொடர்ந்து சிறைக்குச் சென்று கொண்டிருந்தார். காரணம் அவர் பொதுவுடமைத் தத்துவத்தின் மீது கொண்ட அபாரமான பற்று.

60 ஆண்டுகளுக்கு முன்னரே சாதி மறுப்பு, மத மறுப்பு திருமணம் செய்த சமூகப் புரட்சியாளராக இருந்தார். இவ்வுலகில் பொதுமக்களிடமிருந்து சுரண்டப்படும் நபர்களுக்கு எதிராகவே அவர் இருந்துள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் கலைக்குழு

1962 பாவலர் வரதராஜன் நடத்திய கலைக்குழு ஒன்று தான் கம்யூனிஸ்ட் கட்சியின் கலைக்குழு. அந்தக் காலகட்டத்தில் ’கலை இலக்கிய பெருமன்றம்’ என்ற ஓர் அமைப்பை ஆரம்பிக்கிறார்கள். கர்மவீரர் காமராஜருக்கு பிறகு மிகப் பெரிய சமுதாய நோக்கம் உள்ள, சுயநலமில்லாத அரசியல் தலைவரான ஜீவானந்தத்தின் தலைமையில் ’கலை இலக்கிய பெருமன்றம்’ சார்பில் நாடகம் போடுகிறார்கள். அதில் நடிக்க நான் சென்றிருக்கிறேன்.

நாடகத்திற்கு இசை, என் நண்பன் இளையராஜா. அப்பொழுதுதான் மாணவராக இருந்த தா.பாண்டியன், சிவகாம சுந்தரி, மாயாண்டி பாரதி, கே.டி.கே.தங்கமணி, தலைவர் பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்களைப் பார்த்து அவர்களோடு பழகும் வாய்ப்பு எனக்கு நிறைய கிடைத்தது.

முழுக்க முழுக்க சமுதாயத்திற்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். பள்ளிப் பருவத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்த நான், இவர்களுடைய சந்திப்புகளால் ஒரு பொதுவுடமை தோழனாக மாறிப்போனேன்.

சங்கரய்யாவுடன் முதல் சந்திப்பு

கலைத்துறைக்கு நான் வரவில்லை என்றால் இன்றளவும் பொதுவுடமைக் கட்சியின் தொண்டனாக இருந்திருப்பேன். மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள மண்டைய ஆசாரி சந்தில் தான் அப்போது பொதுவுடமைக் கட்சியின் அலுவலகம் இருந்தது. அந்த அலுவலகத்தை இன்றளவும் என்னால் மறக்க இயலாது. அங்கே தான் முதன்முதலில் தோழர் சங்கரய்யாவை சந்தித்தேன்.

அவரோடு பழகும் வாய்ப்பு எனக்கு மிகக் குறைந்த அளவே அப்போது கிட்டியது. நான் கலைத் துறைக்கு வந்த பிறகு என் நண்பர் கதாசிரியர் ஆர்.செல்வராஜனின் சித்தப்பா அவர் என்று தெரிந்து கொண்டேன். திரைப்படத்துறை தொழிலாளர்கள் பிரச்சினை ஏற்பட்டபோது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அவர் மிக அற்புதமான மனிதர்.

’இளைஞர்கள் சங்கரய்யாவை அறிந்துகொள்ள வேண்டும்’

ஆடம்பரமும் பதவி ஆசையும் லஞ்சமும் ஊழலும் பரவிக்கிடக்கும் இன்றைய முதலாளித்துவ அரசியல் சூழலில், அப்பழுக்கற்ற பொது வாழ்வும் மக்கள் சேவையும் மகத்தான தியாகமும் கொண்ட கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

தோழர் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்யும் கல்வி அலுவலர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.