சென்னை: அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் "லேபிள்" என்னும் வெப் சீரீஸின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. காமெடி நடிகனாக அறிமுகமாகி, பின் பாடலாசிரியராக அறியப்பட்ட அருண்ராஜா காமராஜ், தற்போது இயக்குனராக சிறந்து விளங்கிக் கொண்டு இருக்கிறார். இவரது இயக்கத்தில் வெளியான கனா திரைப்படம் பெண்கள் கிரிக்கெட் பற்றியும், கனவுகளை தேடி ஓடும் பெண்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றியும் கூறி மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
இதைத் தொடர்ந்து, உதயநிதி நடிப்பில் நெஞ்சுக்கு நீதி என்ற திரைப் படத்தையும் இயக்கி உள்ளார். இந்தி பட ரீமேக்கான இது, சமூக நீதி பேசிய படமாக அமைந்தது. இந்த நிலையில், அருண்ராஜா காமராஜ் தற்போது ஓடிடி பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளார். இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு, இயக்குநர் அருண்ராஜா காமராஜ் "லேபிள்" என்னும் ஒரு வெப் தொடரை இயக்குகிறார்.
இந்த வெப் தொடருக்கான கதையை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதி உள்ளார். மேலும் இதில் நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். முத்தமிழ் படைப்பகம் தயாரிக்கும் இந்தத் தொடருக்கு சாம் CS இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
மேலும் இதை தொடர்ந்து யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் என நான்கு பாடல் ஆசிரியர்கள் இத்தொடருக்கான பாடல்களை எழுதி உள்ளனர். நடன அமைப்பு பணிகளை அசாரும், சண்டைப் பயிற்சியாளராக சக்தி சரவணனும் இந்த வெப் தொடரில் பணியாற்றுகின்றனர்.
இதுகுறித்து அருண்ராஜா காமராஜ் கூறுகையில், " ஒருவன் எந்த பகுதியை சேர்ந்தவன் என்பதை பொறுத்தே, அவனது குணாதிசயம் இருக்கும் என்கிற பொதுப்படை எண்ணமே இங்கு பலருக்கும் இருக்கிறது. இதுவே அவர்களை தவறான வழியை நோக்கி செல்ல காரணமாகவும் அமைகிறது.
இப்படி தனது வாழ்விடம் சார்ந்தே தனது வாழ்க்கை அமையும் என்பதை ஒரு சிலரால் மட்டுமே மாற்றி அமைக்க முடிகிறது. ஆனால் இந்த சமூகம் தனது பொதுப் படையான பார்வையை மாற்றி அமைக்குமேயானால், ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையை தானே தீர்மானிக்க முடியும்” என்று கூறினார்.
இதையும் படிங்க:நீண்ட இடைவெளிக்குப் பிறகு தென்னிந்திய படத்தில் நடிக்கும் "ஷில்பா ஷெட்டி"