சென்னை: உயர் கல்வி நிறுவனங்கள் (Higher education institutions) இனி வாரத்தில் ஆறு நாட்கள் மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகளை நடத்த வேண்டும் என உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கரோனா காரணமாகக் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக உயர் கல்வி நிலையங்கள் (கல்லூரிகள்) மாணவர்களுக்கு ஆன்-லைன் வழியில் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன.
அப்போதும் மாணவர்கள் சுழற்சிமுறையில் 50 விழுக்காடு எண்ணிக்கையுடன் வகுப்புகளை நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்து வரக்கூடிய நிலையில், இனி சுழற்சி முறையில் அல்லாமல் நேரடி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களுக்கான நேரடித் தேர்வுகள்
இதுகுறித்து உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ள உத்தரவில், "தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்,
தனியார் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்கள் ஆகியவை மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் நேரடியாக வகுப்புகளை நடத்தலாம்.
தமிழ்நாடு அரசின் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட வேண்டும்.
நடப்பு பருவத்தில் அனைத்து மாணவர்களுக்கான நேரடித் தேர்வுகள் ஜனவரி 20ஆம் தேதிக்கு மேல் நடத்தப்பட வேண்டும். இந்த உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் கமல்ஹாசனுக்கு கரோனா - விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து