சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பசுமை பட்டாசு என்றால் என்ன?... வழக்கமாக பயன்படுத்தும் வேதிப் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத புதிய வகை வேதிப் பொருட்களுடன் தயாரிக்கப்படும் பட்டாசுகள் தான் இந்தப் பசுமை பட்டாசுகள். இவற்றில் புகை மற்றும் சத்தம் குறைவாக வரும். வழக்கமாக பட்டாசு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பேரியம் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படாது.
ஆனால் இந்த உத்தரவு தாமதமாக வந்ததால் பசுமை பட்டாசுகள் இன்னும் முழுமையாக சந்தைக்கு வரவில்லை என்கிறார் பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத்தின் செயல்தலைவர் டி.எஸ்.காஜா முய்தீன. இதுகுறித்து அவர் கூறுகையில், "சென்னை தீவுத்திடலில் 60 கடைகள் உள்ளன. நேற்று ஏராளமான மக்கள் வந்து ஆர்வத்துடன் பட்டாசு வாங்கிச் சென்றனர். இன்று மழை காரணமாக விற்பனை சற்று குறைந்துள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவு தாமதமாகவே வந்தது. இதனால் தற்போது 30 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை மட்டுமே பசுமை பட்டாசுகள் சந்தைக்கு வந்துள்ளது. 2021ஆம் ஆண்டு முதல் முழுமையாக பசுமை பட்டாசுகள் தான் விற்பனை செய்யப்படும்" என்றார்.
தீவுத்திடலில் பட்டாசு கடை வைத்திருக்கும் தினகரன் கூறுகையில், "பசுமை பட்டாசு இன்னும் முழுமையாக கடைகளுக்கு வரவில்லை. நீதிமன்ற உத்தரவுக்கு முன்பு தயார் செய்யப்பட்ட சரக்குகளே தற்போது சந்தைக்கு வந்துள்ளன. பசுமை பட்டாசு உத்தரவால் விற்பனை பாதிப்படையவில்லை" என்று தெரிவித்தார். மேலும் "பசுமை பட்டாசுனு சும்மா ஸ்டிக்கர் தான் ஒட்டுறாங்க" என்று சில வியாபாரிகள் கூறுகின்றனர்.
பசுமை பட்டாசை அடையாளம் காணும் வகையில் அதில் தனி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்ரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போலியான ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பட்டாசுகளும் சந்தைக்கு வருகிறது. ஸ்டிக்கரில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் உண்மையான பசுமை பட்டாசு எது, போலியானது எது என தெரிந்துவிடும் என தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் (NEERI) தெரிவித்துள்ளது.
பிஜிலி வெடி பாக்ஸ் ஒன்று 56ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. குருவி வெடி பாக்ஸ் ஒன்று 145 ரூபாய்க்கும், லட்சுமி வெடி 310 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த முறையுடன் ஒப்பிடுகையில் பட்டாசுகளின் விற்பனை 5 முதல் 10 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
சிவகாசியில் 100நாட்களுக்கு மேலாக வேலை நிறுத்தம் நடைபெற்றதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசை தடுக்க பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகளை விதித்ததுள்ளது உச்ச நீதிமன்றம். அதன்படி தமிழ்நாட்டில் காலை, மாலை என இரண்டு மணி நேரம் மட்டும் வெடி வெடிக்க முடியும். இதனை மீறுபவர்கள் மீது கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும் பட்டாசு வெடிப்பதற்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் விற்பனை பாதிக்கவில்லை என்று வியாபாரிகளும், நாங்கள் இதற்குப் பழகிக்கொண்டோம் என மக்களும் கூறுகின்றனர். நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற கட்டுப்பாடுகள் தேவைதான் என்றாலும் பட்டாசு என்பது வெறும் பண்டிகை கால கொண்டாட்டம் மட்டுமல்லாமல், பட்டாசு உற்பத்தியை நம்பியிருக்கும் சுமார் 80 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்றுள்ளது.
இதையும் படிங்க: தீபாவளி 2019 - பட்டாசு உற்பத்தி குறைவால் எகிறிய விலை!