சென்னை: மேற்கு மாம்பலத்தில் இயங்கி வரக்கூடிய ரூபி ராயல் ஜுவல்லர்ஸ் என்ற நிறுவனம் இஸ்லாமியர்களுக்கு வட்டி இல்லாமல் நகைக்கடன் வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பை நம்பி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுமார் 300 கிலோ தங்கம் வரை அடகு வைத்து பணத்தை பெற்றுள்ளனர். அதன்பின் 300 கிலோ நகையுடன் இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் சையத் ஹிப்சார் மற்றும் அவரது மகன்கள் ரகுமான், அனிஷ் ஆகியோர் தலைமறைவானதால், கடந்த 2019ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து நிறுவனத்தின் 5 நிர்வாகிகளை கைது செய்தனர். 4 ஆண்டுகளாகியும் இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் பொருளாதார குற்றப்பிரிவினர் காலம் தாழ்த்துவதாகவும், இழந்த நகையை மீட்டு தரக் கோரியும் அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் அருகே பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் நேற்று (மார்ச்.2) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ராபியா, 'ரூபி என்ற நகைக்கடையில் வட்டியில்லாமல் நகைக்கடன் வழங்கப்படும் என்று வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து, ஒரு பவுனுக்கு 10 ஆயிரம் என்ற கணக்கில் நகையை வைத்து கடன் வாங்கினோம். இவ்வாறு ஆயிரக்கணக்கானோர் அக்கடையில் நகைகளை வைத்தநிலையில், கடையின் உரிமையாளர் திடீரென நகைகளை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார். இதனைத்தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
அடிக்கடி நீதிபதிகளை 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் செய்வதால், இந்த வழக்கு நான்கு ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. இதனிடையே கடந்த பிப்.5ஆம் தேதி நீதிபதியை மாற்றியுள்ளனர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நாங்கள் எல்லாம் நான்கு ஆண்டுகளாக அழைந்துகொண்டு இருக்கிறோம். இதுகுறித்து கேட்டால் இன்னும் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) அலுவலகத்திலிருந்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறுகின்றனர்.
சுமார் 3 ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேலானவர்களிடம் இருந்து 380.77 கிலோ தங்கத்தை நகைக்கடைக்காரர் ஏமாற்றிவிட்டார். இதனால், பல இளம்பெண்களின் திருமணம் நின்றுவிட்டது. அத்தோடு, நகையை பறிகொடுத்தவர்களுள் கிட்டதட்ட 45 பேர் வரை தங்களின் குடும்பத்தினரின் சார்பாக அவர்களின் இறப்பு சான்றிதழுடன் இன்று போராட்டத்தில் ஈடுபட வந்துள்ளனர். இவ்வாறு நகையை இழந்ததால் எத்தனையோ குடும்பத்தினர் தங்களின் பெற்றோரை இழந்து, உடன் பிறந்தவர்களை இழந்து பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
நகைகளுக்கு பில் கூட சிலருக்கு வெறும் காகிதத்தில் எழுதித் தரப்பட்டுள்ளது. 90% நகைகள் ஆஷா ஜெயின் என்பவரிடம் இருப்பதாக நீதிமன்றத்தில் உறுதியானது. ஆனால், அவரோ தனது உடல்நிலை சரியில்லை எனக் கூறி, அவருக்கு பதிலாக சி.பி.ஜெயின் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். இதனிடையே, அவரது மனைவியோ 'நாங்கள் நகையை கொடுத்து விடுகிறோம்; எங்களிடம் 7 கிலோ நகை மட்டுமே உள்ளது' எனக் கூறியுள்ளார்.
நகைகளைக் கொண்டுபோய், மற்றொரு இடத்தில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அடகு வைத்து மாட்டிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை விசாரித்து வந்த ஓய்வுபெற்ற நீதிபதியே மீண்டும் வழக்கை விசாரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொண்டு விசாராணையை தீவிரப்படுத்த வேண்டும்.
நகைகளை மோசடி செய்தவர் ஜாமீனில் வெளிவந்து, பாதிக்கப்பட்டோரை சந்தித்து சமாதானம் பேசுவதுபோல் மகிழ்ச்சியாக பேசி வருகிறார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதுடன் மோசடி செய்தவர் மீண்டும் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி இழந்த நகைகளை பெற்று தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். குற்றவாளியுடைய 7 சொத்துக்கள் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணி நடந்து வருவதாகவும் உடனடியாக நீதிமன்றத்தில் அதனைத் தாக்கல் செய்வதாகவும் உறுதியளித்த நிலையில், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: பானிபூரி கடை போட்டால், பாலியல் வழக்கு போடுவேன்.. மிரட்டிய இன்ஸ்பெக்டர் மீது குற்றச்சாட்டு..