மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவது, அதை அரசுடமையாக்குவது ஆகியவை தொடர்பாக தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை அவசர வழக்காக நாளை (செப்.15) விசாரிக்க அனுமதிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் தீபக் தரப்பு வழக்கறிஞர் முறையிட்டார்.
அப்போது, பேரவைக் கூட்டம் நடைபெறுவதால் அவசரச் சட்டம், சட்டமாக நிறைவேற்றப்படக்கூடும் என்பதால் அந்த வழக்கை விசாரிக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், இவ்வழக்கை அவசர வழக்காக விசாரணைக்குப் பட்டியலிட வாய்ப்பில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், ஒருவேளை சட்டமாக இயற்றப்பட்டால் அதனை எதிர்த்து வழக்கு தொடரும்படி தீபக் தரப்பிற்கு அறிவுறுத்தினர்.