சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் சூழ்ந்ததும், சாலைகளில் மரம் முறிந்தும் காணப்பட்டது. இந்நிலையில், புயலின் தாக்கத்தினால் உயிரிழந்தவர்கள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் விபரங்களை சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள்: புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட வைத்தியநாதன் மேம்பாலம் கீழுள்ள பிளாட்பாரம் அருகே 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எஸ்பிளனேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லோன் ஸ்கொயர் சாலை ஆவின் பூத் அருகில், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த பத்மநாபன் (50) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், அவரது உடலை மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவான்மியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகரில் முருகன் (35) என்பவர் மீது மரம் விழுந்து உயிரிழந்துள்ளார். பட்டினப்பாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, மாநகர போக்குவரத்து கழக டிப்போ அருகில் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் இறந்து கிடந்த நிலையில், அவரது உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துரைப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாண்டியன் நகர், செல்வ விநாயகர் கோயில் தெருவில் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த கணேசன் (70) மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். நொச்சிக்குப்பம் எல்லையம்மன் கோவில் தெருவில், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த பரத் (53) என்பவர் உயிரிழந்துள்ளார்.
சூளைமேடு மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாவலராக பணியாற்றி வந்த செல்வம் (50) என்பவர், பள்ளி வளாகத்திற்குள் இருந்த மழைநீரில் இறந்து கிடந்த நிலையில், அவரது உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோட்டூர்புரம் மாநகராட்சி பள்ளி நிவாரண மையத்தில் தங்கியிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மிராஜுல் இஸ்லாம் (19) என்பவர், இன்று (டிச.05) அதிகாலை வலிப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.
மருத்துவ உதவி பெறும் நபர்கள்: காரனேஷன் நகரில், மரம் விழுந்து தலையில் காயம் ஏற்பட்ட மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ரமேஷை (43) மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த முருகன் (37) என்பவர், அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
எஸ்பிளனேடு காவல் நிலைய எல்லையைச் சேர்ந்த 72 வயது பெண், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பிரசவ வலியிலிருந்த கொளத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் மீட்கப்பட்டு, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
புளியந்தோப்பு ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து நான்கு கர்ப்பிணிப் பெண்கள் மீட்கப்பட்டு, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பிரசவ வலியிலிருந்த கர்ப்பிணிப் பெண் அயனாவரத்திலிருந்து மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வேப்பேரி போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவசங்கரன் மற்றும் காவலர் ராஜசேகர் ஆகியோர் EVK சம்பத் சாலை-EVR சாலை சந்திப்பில் பணியிலிருந்தபோது மின்சாரம் தாக்கியதில், காவலர் ராஜசேகர் மயங்கி விழுந்த நிலையில், இருவரும் கீழ்ப்பாக்கம் அப்பலோ பர்ஸ்மெட் மருத்துவமனைக்கு சிசிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
எல்லையம்மன் கோயில் தெருவில், படுக்கையில் இருந்த புற்று நோயாளி மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கட்டுமானப் பணி ஊழியரான மதுனுமுர்மு, கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பு அருகே சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியுள்ளது. இந்நிலையில் அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கொடுங்கையூரைச் சேர்ந்த மாநகராட்சி ஊழியர் ரமேஷ் மீது மரம் விழுந்ததில், தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதை போல பிராட்வே BRN கார்டன் பகுதியைச் சேர்ந்த ஆனந்தபாபு (35) மீது மரத்தின் கிளை விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. இருவரும் மீட்ககப்பட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: சென்னை உள்பட 10 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!