சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் புதிய திட்டப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி, மேயர் பிரியா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மேலும் வால் டாக்ஸ் சாலை - ஜட்காபுரம் பகுதியில் ரூ.59 லட்சம் மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு கட்டடம் கட்டும் பணி, கல்யாணபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதியில் ரூ.52.98 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி கட்டடம், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் விளையாட்டுத் திடல் கட்டுவதற்கான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், "தொடர்ந்து 9 ஆண்டுகளாக பாஜக அரசு, மத்திய அரசின் நிறுவனங்களான சிபிஐ மற்றும் வருமான வரித்துறையை அவர்களது வீட்டு பணியாட்களைப் போல நடத்துகிறார்கள். யார் யார் பிடிக்காதோ, அவர்களை யார் எதிர்த்து பேசினார்களோ, எதிர்த்து நடக்கிறார்களோ அவர்களை அசிங்கப்படுத்தும் வகையில் அரசியல் லாபம் தேடும் வகையில் பாஜக அரசு நடந்து வருகிறது.
இதுவரை ஆருத்ரா நிதி நிறுவனம் மீது ஏன் ஒரு நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை. மிகப்பெரிய பண மோசடி நடைபெற்றுள்ளது. ஏனென்றால், மாநில பாஜக தலைவருடன் நிதி நிறுவன உரிமையாளர்கள் நெருங்கி பழகியவர். ஒரு விசாரணை கூட இல்லை, ஏழை மக்களின் பணம் ஏமாற்றப்பட்டுள்ளது. அதற்கெல்லாம் மத்திய அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை. ஆனால், தேர்தல் வரவுள்ளதால் யார் யார் எதிர்க்கிறார்களோ, அவர்களை களங்கப்படுத்தும் வகையில் மட்டும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மட்டுமல்ல, கர்நாடக மாநிலத்தில் வருமான வரித்துறை சோதனை காங்கிரஸ் நிர்வாகிகள் மீது மட்டுமே நடைபெறுகிறது. ஏன் பாஜகவினர் அவ்வளவு உத்தமர்களா? கர்நாடகாவில் பெரிய அளவில் பாஜக அரசின் ஊழல் தான் பேசப்படுகிறது. அவர்களுக்கு வருவதை திசை மாற்றுவதற்காக நடந்து வருகிறது. இது ஒன்றும் புதிதல்ல.
ஊடகங்களில் பெரிதாக விளம்பரப்படுத்தி உலகமே வீழ்ந்துவிட்டது போல் செய்வார்கள். அதானி மீது எந்த நடவடிக்கையாவது எடுத்து இருக்கிறார்களா?. ஏழை மக்களின் பணம் தான் அதானிக்கு முதலீடாக செய்யப்பட்டு இருக்கிறது. இதுதான் இன்றைய மோடி அரசு செய்யும் செயல்" என தயாநிதி மாறன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தஞ்சாவூரில் பேப்பர் பொறுக்கிய பெண்ணை காலணியால் அடித்த நபர் கைது!