சென்னை: ஆர்.கே.நகர் 1ஆவது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர், வசந்தகுமார். கடந்த 14ஆம் தேதி காலை தனது விலை உயர்ந்த சைக்கிளை வீட்டிற்கு வெளியில் நிறுத்திவிட்டு, சிறிது நேரத்திற்குப்பிறகு வந்து பார்த்துள்ளார்.
அப்போது சைக்கிளை யாரோ திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து வசந்தகுமார், அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.
விலை உயர்ந்த சைக்கிள் திருட்டு
அப்போது சுமார் 40 வயதுடைய நபர் விலை உயர்ந்த சைக்கிளைத் திருடும் காட்சிப் பதிவாகி இருந்தது. அதன் தொடர்ச்சியாக அந்த நபர் செல்லும் வழிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில், அவர் திருடிய சைக்கிளை ஆயிரம் விளக்குப் பகுதியில் கொண்டு நிறுத்தியுள்ளார்.
இதையடுத்து, காவல் துறையினர் அந்த நபரைக் கைது செய்தனர். விசாரணையில் சைக்கிளைத் திருடியவர் சூளை பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பதும்; பி.எஸ்சி வேதியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து, அவரிடமிருந்து 5 விலையுயர்ந்த சைக்கிள்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருடிய நீதிபதியின் பேரன்
கைதான சரவணனின் தாத்தா ஓய்வுபெற்ற நீதிபதி ஆவார். சரவணனுக்குப் பெற்றோர் யாரும் இல்லாத காரணத்தினால் தொடர்ந்து சைக்கிள்களைத் திருடி விற்று வாழ்க்கையை நடந்தி வந்துள்ளார்.
இவர் ஏற்கெனவே ராயப்பேட்டை, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் ஆகியப் பகுதிகளில் விலையுயர்ந்த சைக்கிள்களைத் திருடியுள்ளார். கைது செய்யப்பட்ட சரவணன் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:சென்னையின் இளம் பட்டியலின பெண் மேயர் வேட்பாளர் - 340 ஆண்டுகால வரலாற்றில் ஒரு மைல்கல்!