கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து தமிழ்நாடு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்படுகின்றன.
இந்நிலையில், ஊரடங்கை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் 126 நாட்களில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 927 பேரை காவல் துறையினர் கைது செய்து விடுவித்துள்ளனர். இதன்மூலம் போக்குவரத்து காவல் துறையினர் அபராதமாக 19 கோடியே ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 186 ரூபாய் வசூலித்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் 6 லட்சத்து 55 ஆயிரத்து 433 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 716 பேராக உள்ளது. அதில், ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 249 பேர் கரோனா சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 3ஆயிரத்து 571 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஊழியர்களுக்கு கரோனா: கோவில்பட்டி நீதிமன்றம் மூடல்