சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் மரணம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்க்கேடு தொடர்பாக வருகிற 22ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சின்னமலையில் இருந்து பேரணியாக சென்று தமிழக ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளனர். இதற்காக பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்கக்கோரி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
ஆளுநர் மாளிகையை நோக்கி அதிமுக பேரணி: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'வரும் 22 ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் சேர்ந்து கிண்டி சின்னமலை அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக கூறினார். திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், சட்ட ஒழுங்கு பிரச்னை, பல்வேறு முறைகேடுகள் உள்ளதாக குற்றம்சாட்டிய அவர், ரூ.30 ஆயிரம் கோடி இரண்டு ஆண்டு காலத்தில் அவர் தாத்தா காலத்தில் கூட சம்பாதிக்காததை உதயநிதி சம்பாதித்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இதனை, அவருடன் இருந்தவர் போட்டு கொடுத்து இப்போது அதைப் பதுக்க இடம் தேடிவருதாகவும் சாடியுள்ளார்.
ஜல்லிக்கட்டு நாயகனா ஓபிஎஸ்?: அதிமுக எடுத்த தொடர் சட்ட நடவடிக்கை காரணமாக தான் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எந்த இடையூறும் இல்லாமல் நடைபெற்றது. 'ஜல்லிக்கட்டு நாயகன்' என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்ளும் ஓ.பி.எஸ் யோசித்து பார்க்க வேண்டும் என்று கூறிய அவர், ஜல்லிக்கட்டு தொடர்பாக ஆயிரக்கணக்கான மக்கள் மெரினாவில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டதினால் மத்திய அரசு அனுமதி வழங்கியது என்றார். குறிப்பாக, போராட்டம் நடந்து கொண்டிருக்கும் சூழலில், அப்போதைய முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தின்போது, கொடியேற்றி வரலாற்றில் பெயர் இருக்க வேண்டும் என்ற ஆசையில் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினரை ஏவி விட்டு போராட்டக்காரர்கள் மீது முழுமையாக தடியடி செய்தார்.
ஓபிஎஸ் தனக்குத்தானே புகழாராம்: இவர் முதலமைச்சராக இருந்தபோது, குடியரசு விழா நடப்பதற்காக நடத்திய தடியடியில் நடுக்குப்பம், நொச்சிக்குப்பம் மீனவர்கள் அதிகம் தடியடிக்கு ஆளாகினர். இவர் ஜல்லிக்கட்டு நாயகனா? என்று கேள்வி எழுப்பினர். உண்மையை மறைக்க தனக்கு தானே ஜல்லிக்கட்டு நாயகன் என்று சொல்லிக் கொள்கிறார் என அவர் கூறினார். காவல்துறையினர் தடியடிக்கு அனுமதி வழங்கிய ஓ.பி.எஸுக்கு அப்போதே தான் எதிர்ப்பு தெரிவித்ததாக அவர் கூறினார்.
அமைதி இழந்த தமிழ்நாடு: நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், கட்ட பஞ்சாயத்து, கொலை, கொள்ளை நடப்பதாக குற்றம்சாட்டியதோடு, காரில் வந்து இப்போது நகை பறிப்தாகவும், அந்தளவுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் சாடினார். இந்தியாவிலே சட்ட ஒழுங்கில் மிக மோசமான மாநிலம் தமிழ்நாடுதான் என்று கூறினார். அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்த நிலையில், திமுக ஆட்சியில் அமளி பூங்காவாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
விஷசாராய மரணங்களுக்கு நிவாரணம்: ஊராட்சி தலைவர்களுக்கு கொத்தடிமைகளாக ஊராட்சி செயலாளர்கள் இருக்க வேண்டும் என்று இந்த அரசு நினைப்பதாகவும், அதேநேரத்தில் மருத்துவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் போராடி வருவதாகவும் கூறினார். வாரி வாரி இறைத்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் அமாவாசை தான் திமுகவுக்கு. விஷசாராயம் அருந்தி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவியை தமிழக அரசு வழங்கியிருக்கிறது. அதேபோன்று, இனி வரக்கூடிய காலங்களில் எதிர்பார்த்த விதமாக உயிரிழக்கும் குடும்பங்களுக்கு நிவாரண உதவியை வழங்குமா என்று கேள்வி எழுப்பினார்.
கள்ளச்சாராயத்தை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள்ளச்சாராயம் குடித்தவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்த்ததை வைத்து சமூக வலைதளங்களில் இந்த ஆட்சியை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருவதாகவும், ஆரம்பத்திலேயே திமுகவில் இருந்துகொண்டு சாராயம் விற்றவர்களை கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இத்தனை பேர் உயிரிழந்திருக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். கொள்கை விளக்கக் குறிப்பில், கள்ளசாராயம் குறித்து எடுத்த நடவடிக்கை குறித்து ஏன் தெரிவிக்கவில்லை? எனக் கேள்விழுப்பினார்.
நிதானம் இல்லாமல் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி: அதிமுக ஆட்சியில் 20 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது தொடர்பான கேள்விக்கு, உண்மையில் செந்தில் பாலாஜி நிதானத்தில் தான் பேசுகிறாரா? என்று மதுபோதையை பரிசோதிக்கும் ப்ரீத் அனாலைசர் (Breath Analyzer) வைத்து தான் பரிசோதிக்க வேண்டும் என்றார். இம்மாதிரியான விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கு சட்டமில்லை; ஆனால், எதிர்கட்சிக்கு மட்டுமே சட்டம் உள்ளது என்றும் சாடினார். எதிர்க்கட்சி தவறு செய்யவில்லையென்றாலும், பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்புவார்கள் எனவும் இனியாவது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
திமுக அமைச்சர்கள் தொடர்ச்சியாக பொதுமக்களை இழிவாக நடத்துகின்றனர். ஆனால் இதுவரை, இவர்கள் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கல்வீசிய நாயகன் அமைச்சர் நாசருக்கு மட்டுமே பால் ஊத்தியாச்சு, ஆனால் அந்த பொறுப்பை இஸ்லாமிய சமூகத்திற்கு கொடுக்காமல் உதயநிதி ஸ்டாலின் இன்னொரு ரசிகர் மன்ற தலைவர் ராஜாவிற்கு வழங்கியது கண்டிக்கத்தக்கது என அவர் கூறினார்.
இதையும் படிங்க: கர்நாடக CMஆக சித்தராமையா, DCMஆக டிகேஎஸ் - வெளியானது அதிகாரப் பூர்வ அறிவிப்பு!