"காவல்துறை உங்கள் நண்பன்" என்ற வாசகம், வண்டியில் எழுதி வைப்பதற்கு மட்டுமே, காவலர்களின் செயல்பாடுகள் அதற்கேற்ப இருப்பதில்லை என மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காவல்துறையும், மனித உரிமை ஆர்வலர்கள் கூறுவதைக் காப்பாற்றும் வகையில்தான் செயல்பட்டு வருகிறது.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, மெரினா போராட்டத்தில் மீனவர்களைத் தாக்கி வண்டிகளைக் கொளுத்தியது, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்களைத் தாக்கியது என காவல்துறையின் அட்டூழியங்களை சொல்லிக் கொண்டே போகலாம். 2001 - 2018ஆம் ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் மட்டும் 100-க்கும் அதிகமான லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாத்தான்குளம் லாக்கப் மரணங்களால் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய ஸ்ரீதர் குறித்து அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொலை முயற்சி வழக்கு
காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு கலைவாணன் என்ற அண்ணன் இருக்கிறார். அவரது மருமகள் திவ்யா என்பவரை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தது மட்டுமில்லாமல், ஸ்ரீதர் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து பழரசத்தில் விஷத்தை கலந்துகொடுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இது தொடர்பாக வைகை அணை காவல்நிலையத்தில் ஸ்ரீதர் மீது கொலை முயற்சி உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நில அபகரிப்பு வழக்கு
2011ஆம் ஆண்டு நில ஆக்கிரமிப்பு வழக்கு ஒன்றில் ஸ்ரீதர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக, அப்போதைய கன்னியாகுமரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் தெரிவித்துள்ளார்.
ஜவகர் என்பவருடைய நிலத்தை, அய்யாக்கண்ணு எனும் தலைமைக் காவலர் ஆக்கிரமித்திருக்கிறார். இதுதொடர்பாக, ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் ஜவகர் புகாரளித்துள்ளார். இந்த வழக்கை சரவணன் எனும் காவல் ஆய்வாளர் விசாரித்து வந்த நிலையில், அந்த இடத்துக்கு ஸ்ரீதர் புதிதாக வந்துள்ளார். தலைமைக் காவலர் அய்யாக்கண்ணுக்கு ஆதரவாக செயல்பட்டு, ஜவகர் குடும்பத்தின் மீது பொய் வழக்குகளைப் போட்டு ஸ்ரீதர் அட்டூழியம் செய்திருக்கிறார்.
தலித் உரிமை செயற்பாட்டாளரைத் தாக்கியது
2018ஆம் ஆண்டு திருநெல்வேலி காவல் எல்லைக்குள் பணியாற்றிய ஸ்ரீதர், தனக்கு எதிராகப் பேசியதாக, தலித் உரிமைச் செயற்பாட்டாளர் ஆண்டனி பிரான்சிஸ் என்பவரைத் தாக்கியுள்ளார். இது தொடர்பாகவும் அவர் மீது புகார் உள்ளது.
இத்தனை தவறுகள் செய்தும் ஸ்ரீதர் தண்டிக்கப்படவில்லை. இது காவல்துறை எந்த அளவுக்கு மோசமாக செயல்பட்டு வருகிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்த தைரியத்தில்தான் சாத்தான்குளம் வழக்கை விசாரித்த கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனை, காவலர்கள் அலட்சியப்படுத்திப் பேசியிருக்கிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் காவல்துறையின் மானம் கப்பல் ஏறுவதோடு, அப்பாவி பொது மக்கள் பலர் இந்த அராஜக அமைப்பால் உயிரிழக்கவும் நேரிடும். எனவே இந்த வழக்கில் உரிய நீதி கிடைக்க வேண்டியது அவசியமானது.