சென்னை: வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நேற்று 25 ரூபாய் உயர்ந்தது. இதனால் தமிழ்நாட்டில் சிலிண்டர் விலை ரூ. 900ஐ தாண்டியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.660க்கு விற்கப்பட்டது.
சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்வு
பின்னர், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை தற்போது ரூ.900ஐ தாண்டி விற்கப்படுகிறது. இதேபோல் வணிக ரீதியான சிலிண்டர் விலையும் ரூ.75 உயர்ந்து ரூ.1,831க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கரோனா காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிலிண்டர் விலை உயர்வு மக்களை கவலையடைய செய்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு மே மாதத்துடன் சமையல் எரிவாயு சிலிண்டர் மீதான மானியத்தையும் ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது.
சிபிஎம் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எண்ணூர் - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் இன்று (செப்.2) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கட்சி உறுப்பினர் கே. வெங்கட் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டு விலை உயர்வை கண்டித்தும், ஒன்றிய அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க: சிலிண்டர் விலை உயர்வு - மக்கள் கவலை