இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பட்ஜெட் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2020-21ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகளைச் சமர்ப்பித்து, நிதிநிலை அறிக்கையை மக்களவையில் வாசித்துள்ளார். நிதியமைச்சர் நீண்ட உரையாற்றி சாதனை படைத்துள்ளார். ஆனால், அவரது உரையில் நாடு எதிர்கொண்டு வரும் சமூக, பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் எந்த முயற்சியும் காணப்படவில்லை.
நாட்டினுடைய இறையாண்மையின் ஆணி வேராக விளங்கிவரும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை செய்வது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மக்கள் நம்பிக்கையைப் பெற்று, லாபமீட்டும் நிறுவனமாகச் செயல்பட்டு, நாட்டின் இன்றியமையாத தேவைகளை நிறைவேற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை (LIC) தனியாருக்கு விற்பதில் நிதிநிலை அறிக்கை ஆர்வம் காட்டியுள்ளது .
விவசாயம், அதன் தொடர்புடைய தொழில்களுக்காக ரூபாய் 2.83 லட்சம் கோடி நிதி ஒதுக்கியும், அதில் 15 லட்சம் ரூபாய் விவசாயிகளுக்குக் கடன் வழங்க ஒதுக்கியும், விவசாயிகள் நண்பனாக வேடம் போடுகிறது நிதிநிலை அறிக்கை. அதே சமயம், ஒட்டுமொத்த விவசாயத்தையும் பன்னாட்டு குழும நிறுவனங்களிடம் அடகு வைக்கும் வஞ்சக வலையையும் விரித்துள்ளது. சாலைப் போக்குவரத்துக் கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு, எரிவாயு குழாய் பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு போன்றவைகள் பெரும் தனியார் நிறுவனங்கள் லாபமீட்டும் திட்டங்களாகவே முடியும்.
கொரோனா வைரஸ் போன்ற புதுப்புது நோய்கள் தோன்றி மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், மருத்துவம், சுகாதாரப் பணிகள் முழுவதையும் குழும நிறுவனங்களிடம் விட்டுவிடுவது, மனித வளத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். உணவு மானியத்திற்கும், குழந்தைகள் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீட்டை குறைத்திருப்பது குழந்தைகள், ஏழை, எளிய மக்களின் உடல் நலனைப் பாதிக்கும்.
கல்வித்துறையில் பி.பி.பி. திட்டத்தில் 150 பல்கலைக்கழகங்கள் உருவாக்குவது, இன் சாட் தேர்வு முறை, ஆன் லைன் தேர்வு முறை உள்ளிட்டவை அடங்கிய, தேசிய கல்விக் கொள்கை உழைக்கும் பகுதியைச் சேர்ந்த அடித்தட்டு மக்களின் கல்வி உரிமையை பறிக்க வழிவகுக்கும். இத்தகைய கல்விக் கொள்கையை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்திருப்பது சமூக நீதிக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் எதிராக அமையும்.
மத்திய அரசின் 2020-21ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை வழக்கம்போல் தனது குருபீடத்தின் கட்டளைகளை நிறைவேற்றுவதாக உள்ளது. குரு பீடத்தின் மீது உள்ள விசுவாசத்தை மறைத்து விட்டு நாட்டின் பிரச்னைகள் மீது தீர்வு காண முயற்சிப்பதாக நீலிக் கண்ணீர் வடிக்கிறது" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ரஜினி பட 'பஞ்ச்' பேசும் அழகிரி: செல்போனில் இருவரும் பேசியது என்ன?