சென்னை: உலக அளவில் மாணவர்கள் தங்கள் உரிமைகளுக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் படிப்பு மட்டுமின்றி, தங்களின் கருத்துகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் பல்வேறு மாணவ இயக்கங்கள், மாணவ அமைப்புகள் ஆகியவை உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.
மாணவர் செயல்பாடு அல்லது கேம்பஸ் ஆக்டிவிசம் என்பது அரசியல், சுற்றுச்சூழல், பொருளாதாரம் அல்லது சமூக மாற்றத்தை ஏற்படுத்த மாணவர்கள் செய்யும் வேலை. கல்வியைத் தவிர மாணவர் குழுக்கள் பெரும்பாலும் ஜனநாயகமயமாக்கல் மற்றும் சிவில் உரிமைகளை வென்றெடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இத்தகைய இயக்கங்கள் உயிர்ப்போடு இருப்பதால் தான் மாணவர்களால் அரசியல் செயல்பாடுகள், சமூக அக்கறை பற்றி தெரிந்து கொள்ளவும், செயல்படவும் முடிகிறது. ஆனால், சமீப காலமாக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் இயக்கங்களுக்குப் பெரும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
அந்த வகையில் சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் தங்களது உரிமைக்காகவும், சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்காகவும் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபடுவார்கள். இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. சமூகவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என அத்துறை தலைவர் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
மேலும் போராட்டங்களில் ஈடுபட மாட்டேன் எனவும், அரசியல் தொடர்பில் இருக்க மாட்டேன் என்றும்; துறைத் தலைவருக்கு தெரிவிக்காமல் விடுப்பு எடுத்தால் அதற்கான நடவடிக்கைக்கு கட்டுப்படுகிறேன் எனவும் உறுதி மொழி கூறி, அதில் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் கையொப்பம் இட வேண்டும் என சமூகவியல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் எனப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து இன்று (ஜூலை 22) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், "சென்னை பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துறை, சமூகவியல் முதுநிலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் மாணவர்கள் அரசியல் கட்சிகள் சார்ந்த எந்த ஒரு அமைப்பு மற்றும் சங்கங்களில் உறுப்பினராக இருக்கக் கூடாது எனவும், அப்படி மாணவர்கள் ஈடுபட்டால் உடனே, கல்வி பெறும் வாய்ப்பில் இருந்து நீக்கலாம் எனவும் துறைத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. இது மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும்'' என அவர் கூறினார்.
அரசியல் அமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மதிக்காமல் செயல்பட்டுள்ள இச்சுற்றறிக்கையை வெளியிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும், சுற்றறிக்கையை திரும்பப் பெறவும் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்.. பின்னணி என்ன?