சென்னை: தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். ஆளுநராக நியமிக்கப்பட்டவர் அரசியல் சார்ந்தோ, அரசு அமைப்புகளிலோ பதவியில் இருக்கக் கூடாது என்பது விதி.
ஆகவே, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு இன்று(பிப்.15) வந்த சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகும் கடிதத்தை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சி.பி.ராதாகிருஷ்ணன், “அண்ணாமலை போன்று இளம் தலைமுறையினரிடம் பாஜகவை விட்டுச்செல்வது நாங்கள் உழைத்த உழைப்பிற்கு மகத்தான பரிசாக நினைக்கிறோம். பல விமர்சனங்களை கடந்து தமிழ்நாட்டில் பாஜகவை ஆட்சியினை அண்ணாமலை அமர்த்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.
ஜார்க்கண்ட் ஒரு அற்புதமான மாநிலம். அங்கு பழங்குடியின மக்களும், பட்டியலின மக்களும், ஏழ்மை நிலையில் உள்ள மக்களும் உள்ளனர். அவர்களுக்கு சேவை செய்கின்ற வாய்ப்பை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் எனக்கு வழங்கியுள்ளனர்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: அதிமுகவில் அடுத்த கட்ட நகர்வு என்ன? ஓபிஎஸ் தரப்பினர் ஆலோசனை!